குருதி மலசலம் (பழனி) – திருப்புகழ் 146 

குருதி மலசல மொழுகு நரகுட
லரிய புழுவது நெளியு முடல்மத
குருபி நிணசதை விளையு முளைசளி – யுடலூடே

குடிக ளெனபல குடிகை வலிகொடு
குமர வலிதலை வயிறு வலியென
கொடுமை யெனபிணி கலக மிடுமிதை – யடல்பேணி

மருவி மதனனுள் கரிய புளகித
மணிய சலபல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு மலைதனில் – மயலாகா

மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபத – மருள்வாயே

நிருதர் பொடிபட அமரர் பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரிகட லெரிய வுருவிய – கதிர்வேலா

நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகிலுடல் கிழிய வருபரி – மயிலோனே

பருதி மதிகனல் விழிய சிவனிட
மருவு மொருமலை யரையர் திருமகள்
படிவ முகிலென அரியி னிளையவ – ளருள்பாலா

பரம கணபதி யயலின் மதகரி
வடிவு கொடுவர விரவு குறமக
ளபய மெனவணை பழநி மருவிய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : குழல் அடவி (பழனி) – திருப்புகழ் 147

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *