இன்றைய பெண்களின் விருப்பமான ஆடைகளில் ஒன்றாக இருப்பது லெக்கின்ஸ் தான். அனைத்து வண்ணங்களிலும் கிடைக்கும் இந்த நாகரீக உடை பெண்களுக்கு அணிந்து கொள்ள மிகவும் வசதியாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் தோன்றச் செய்யும். ஆனால், நம் நாட்டின் வெப்பநிலைக்கு இந்த லெக்கின்ஸ் சிறந்த உடை அல்ல. இதனால் பல தீமைகள் ஏற்படும்.
உடலோடு ஒட்டி இருக்கும் இந்த உடை பெண்களுக்கு மிகவும் பிடித்து இருப்பதற்கான காரணமே அதன் மெல்லிய பண்பும், கனமாக இல்லாமல் இருப்பதும் தான். ஆனால், இதன் மூலம் பெண்களுக்கு சௌகரியம் இருந்தாலும், ஆரோக்கிய சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.
ஒரு காலத்தில் உள்ளாடையாக மட்டுமே அணியப்பட்ட இந்த லெக்கின்ஸ், தற்போது எல்லா மூலைமுடுக்கெங்கிலும் உள்ள பெண்களை தனக்கு அடிமை ஆக்கிவிட்டது. உலகளவில் அதிகம் விற்பனையாகும் ஆடைகளில் ஒன்றான லெக்கின்ஸ் அணிவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
சரும பிரச்சனைகள்
லெக்கின்ஸ் அல்லது பிற இறுக்கமான ஆடைகளை அணியும் போது, அவை சருமத்தில் உராய்வை ஏற்படுத்தும். இதனால் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, சருமத்தின் வெளிப்புற அடுக்கில் விரிசல் அல்லது புண்கள் போன்றவை ஏற்படும். தொடர்ந்து இறுக்கமான உடைகளையே பயன்படுத்தும் போது, சருமத்தை புண்படுத்தி வேதனைக்கு உள்ளாக்கி விடும். இதனை தவிர்க்கவோ அல்லது சரி செய்யவோ விரும்பினால், லெக்கின்ஸ் மற்றும் இறுக்கமான உடைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள்
இறுக்கமான உடைகளை அணிவதன் மூலம் பூஞ்சை அல்லது பாக்டீரியாத் தொற்றுக்கு ஆளாவீர்கள். இதனால் சருமத்தில் சிவப்பு படைகள் போன்று தோன்றும் அல்லது சொறிகள் போன்று ஏற்படும். இதனை போலிகுலிடிஸ் என்று அழைப்பர்.
இதனை சரியாக கவனிக்காமல் விட்டீர்கள் எனில், அவை உடல் முழுவதும் படர ஆரம்பித்து விடும். இதனை சரி செய்ய சரியான சுய கவனிப்பு, லெக்கின்ஸ் அணியாமல் இருப்பது, பாதிக்கப்பட்ட பகுதியை மருத்துவரிடம் காண்பித்து அதற்கேற்ற மருந்தை பயன்படுத்துவது, வீட்டில் இருக்கும் போது தளர்வான உடையை அணிந்து கொள்வது போன்றவற்றில் ஈடுபடலாம்.
படர்தாமரை
பூஞ்சை தொற்றினால் ஏற்படும் சருமப் பிரச்சனை தான் படர்தாமரை எனப்படும் ரிங்வார்ம். அதிக சருமப் பிரச்சனைகளுக்கு காரணமாவது உடல் சூடு தான். இறுக்கமான லெக்கின்ஸ் போன்ற உடைகளை அணிவதன் மூலம், உடலின் சூடு வெளியேறாமல், உடலிலேயே தங்கி விடுகிறது.
உடற்பயிற்சி செய்யும்போதோ, அல்லது ஜாக்கிங் செல்லும் போதோ லெக்கின்ஸ் அணிவதால் அதிகமான வியர்வை உண்டாகும். இதனால் அரிப்பு ஏற்பட்டு, சருமம் சிவந்து போகும். இது படர்தாமரை வருவதற்கான அறிகுறியாகும். படர்தாமரை வந்துவிட்டால், ஏற்படும் அரிப்பு மிக மோசமாக இருக்கும்.
ரிங்வார்மில் இருந்து விடுபட, பூஞ்சைகளுக்கு எதிரான கிரீம்களை பயன்படுத்தவும், அல்லது மருத்துவரை ஆலோசித்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.
அரிப்பு
படர்தாமரையைப் போலவே அரிப்பும் பல பிரச்சனைகளை சருமத்துக்கு ஏற்படுத்தும். உடலிலேயே தங்கி விடும் வியர்வை மற்றும் உடலின் ஈரப்பதத்தால் ஏற்படும் பூஞ்சையால் அரிப்பு ஏற்படலாம். உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் வியர்வையைப் போக்க, பயிற்சிக்குப் பின் குளித்து விடுவது, பூஞ்சை தொற்றில் இருந்து காக்க உதவும்.
வறட்சி
லெக்கின்ஸ் போன்ற இறுக்கமாக உடைகள் உடல் ஈரப்பதத்தை குறைத்து விடும். இது உடல் அரிப்பு ஏற்படுவதற்கு காரணமாவதுடன், லெக்கின்ஸில் இருக்கும் தூசிகள் தோலை வறட்சியடையச் செய்யும்.
இதனால் சருமத்தில், சிவப்பு நிற தடுப்புகள் மற்றும் சொறி சிரங்குகள் போன்றவை ஏற்படும். இதனைத் தடுக்க, இறுக்கமான உடைகளை அணிவதைத் தவிருங்கள். அதோடு, உடற்பயிற்சி செய்த பிறகு குளிப்பதையும், உடைகளில் அதிக வியர்வை இருந்தால் அதனை உடனே மாற்றி விடுவதையும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
எடை அதிகரிப்பு
லெக்கின்ஸ் அணிவதால் உடல் எடை அதிகரிக்கும் என்பது ஆச்சர்யமாக நம்ப முடியாமல் கூட இருக்கலாம். ஆனால், அது தான் உண்மை. லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அனைத்தும், தசைகளை சோம்பேறிகளாக மாற்றி விடும்.
இதனால், உடல் காலப்போக்கில், மென்மையாகவோ அல்லது உறுதியாகவோ இருக்காது. லெக்கின்ஸ் அணிவது நடைமுறை ரீதியாக வசதியாக இருந்தாலும், அவை பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
லெக்கின்ஸில் உள்ள செயற்கைப் பொருட்கள்
லெக்கின்ஸின் பெரும்பகுதி செயற்கை பொருட்களான பாலியஸ்டர், நைலான், ஸ்பான்டெக்ஸ் போன்றவற்றால் ஆனது. இவை, உடலில் உள்ள ஈரப்பதத்தை விரட்டி, உடலை வெப்பமடையச் செய்யும். இதற்கு சிறந்த மாற்று என்னவெனில், பருத்தியால் ஆன உடைகளை அணிவதே ஆகும்.
அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், இறுக்கமான உடைகள் சருமம் மற்றும் பிறப்புறுப்புகளில் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், இறுக்கமான ஆடைகளை தொடர்ந்து அணிவது பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் படிக்க
நக பாலீஷை நீக்குவதற்கு இதை செய்யலாம்