
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
முதிர்விலிள தனபார – மடவார்தோள்
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்
மொழியுமது மதியாமல் – தலைகீழ்வீழ்ந்
தகமகிழ விதமான நகையமுத மெனவூற
லசடரக மெழவாகி – மிகவேயுண்
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி
னமுதுபரு கிடஞான – மருளாயோ
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை – விடுவோனே
வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி
வருபனிரு கரதீர – முருகோனே
பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு
பரமகுரு வெனநாடு – மிளையோனே
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு
பழநிமலை தனில்மேவு – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : முதிரவுழையை (பழனி) – திருப்புகழ் 186