
முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச
முகிலளக மகில்பொங்க – அமுதான
மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட
முகம்வெயர்வு பெறமன்ற – லணையூடே
கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று
படவுருகி யிதயங்கள் – ப்ரியமேகூர்
கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற
கவலைகெட நினதன்பு – பெறுவேனோ
அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட
அதிரவெடி படஅண்ட – மிமையோர்கள்
அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டு
அவர்கள்முனை கெடநின்று – பொரும்வேலா
தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை
சடைமுடியி லணிகின்ற – பெருமானார்
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
தணிமலையி லுறைகின்ற – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : மொகுமொகு என (திருத்தணிகை) – திருப்புகழ் 296