கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வோர் ஒரு கைத்தண்ணீரையே அருந்துதல், கந்தபுராணம் படித்தல், கேட்டல், உறங்காது விழித்து இறைவனைச் சிந்தித்தல் ஆகியவற்றைத் தவறாது கொண்டொழுதல் வேண்டும்.
விரதம் என்பதற்று ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்று பொருள். விரத காலங்களில் சாப்பிடாமல் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. மிதமாக உண்பதும், தீயதை நீக்கி நல்லவற்றை உண்பதும், மனம் அடங்கக் கற்பதுமே விரதத்தின் முக்கிய அம்சமாகும்.
முருகனுக்குரிய விரதங்கள் மூன்று
- வார விரதம் (செவ்வாய்க்கிழமை விரதம்)
- நட்சத்திர விரதம் (கார்த்திகை விரதம்)
- திதி விரதம் (சஷ்டி விரதம்)
செவ்வாய்க்கிழமை விரதம்
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார்கள். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வாழ்வில் அமைதி பெறலாம்.
கார்த்திகை விரதம்
கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.
கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர் என்று அருள் புரிந்தார்.
கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேலை வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகலில் உறங்குதல் கூடாது.
விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.
சஷ்டி விரதம்
ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும்.
பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும்.
இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும். எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.
கந்த சஷ்டி விரதத்தை கடைபிடித்தாலேயே நாரத முனிவர் மேலான பதவி பெற்றார். இவ்விரதச் சிறப்பினை விநாயகப் பெருமானே நாரத முனிவருக்கு எடுத்துரைத்தருளினார்.
முன்னவன் அதனைக் கோளா முழுதருள் புரிந்து நோக்கி அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி பொன்னடி வழிபாடாற்றிப் பொருவில் கார்த்திகை நாள் நோன்மைப் பன்னிரு வருடங்காறும் பரிவுடன் புரிதி என்றான்.
இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் தோற்று முப்புவனத்தி வேண்டும் முறையை அடைந்த நீரார் மெய்ப்படு தொகையை யாரே விளம்புவார்.. என்று கந்தபுராணம் இவ்விரத்தைப் போற்றுகின்றது.
கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வோர் ஒரு கைத்தண்ணீரையே அருந்துதல், தருப்பையில் படுத்தல், கந்தபுராணம் படித்தல், கேட்டல், உறங்காது விழித்து இறைவனைச் சிந்தித்தல் ஆகியவற்றைத் தவறாது கொண்டொழுதல் வேண்டும்.
ஓர் ஏழை இவ்விரதமிருந்து மனு என்ற மன்னன் ஆனான். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்று பொருள்.
கந்த சஷ்டி நாளுக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரத்தை அநுட்டிப்பது ஒரு முறை.
அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒரு முறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. உண்ணாவிரதம் இருப்போர் போன்று உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை இவ்விரதமிருப்போர் அருந்தக் கூடாது.
இவ்விரத நாட்களில் விடியற்காலையில் எழுந்திருந்து, நாட் கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.
ஏழாம் நாட்காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.
கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி, நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலியவற்றை வெற்றி கொண்டு வாகை சூடிப் பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும். அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரத மாகும். இவ்விரதம் இருப்போர் பெறும்பயன் பெருவர்.
இதையும் படிக்கலாம் : முருகனின் 16 வகை கோலங்கள்..!