
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு
முளரி முகையென இயலென மயிலென
முறுவல் தளவென நடைமட வனமென – இருபார்வை
முளரி மடலென இடைதுடி யதுவென
அதர மிலவென அடியிணை மலரென
மொழியு மமுதென முகமெழில் மதியென – மடமாதர்
உருவ மினையன எனவரு முருவக
வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய
வுலையின் மெழுகென வுருகிய கசடனை – யொழியாமல்
உவகை தருகலை பலவுணர் பிறவியி
னுவரி தனிலுறு மவலனை யசடனை
உனது பரிபுர கழலிணை பெறஅருள் – புரிவாயே
அரவ மலிகடல் விடமமு துடனெழ
அரிய யனுநரை யிபன்முத லனைவரும்
அபய மிகவென அதையயி லிமையவ – னருள்பாலா
அமர்செய் நிசிசர ருடலவை துணிபட
அவனி யிடிபட அலைகடல் பொடிபட
அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் – விடுவோனே
பரவு புனமிசை யுறைதரு குறமகள்
பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
பணில சரவணை தனில்முள ரியின்வரு – முருகோனே
பரம குருபர எனுமுரை பரசொடு
பரவி யடியவர் துதிசெய மதிதவழ்
பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : வசனமிக ஏற்றி (பழனி) – திருப்புகழ் 192