/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ நாச்சியார் திருமொழி - கண்ணனென்னும்

நாச்சியார் திருமொழி – கண்ணனென்னும்

கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய்தாற் போல் புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே (1)

பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்த்து ஆயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறிமென் குழல் மேல் சூட்டீரே (2)

கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்கண் என்னும் சிறைக் கோலால்
நெஞ்சு ஊடுருவ ஏவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே (3)

ஆரே உலகத்து ஆற்றுவார் ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
காரேறுழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கிரே (4)

அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுவிப் புகுந்து என்னைச் சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே (5)

நடை ஒன்றில்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித் தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே (6)

வெற்றிக் கருளக் கொடியான் தன் மீமீதாடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பேயாக வளர்த்தாளே
குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே (7)

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே (8)

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என்
செம்மை உடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே (9)

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணிவிளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை உற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே (10)

நாச்சியார் திருமொழி – பட்டி மேய்ந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *