நாச்சியார் திருமொழி – கார்க்கோடல் பூக்காள்

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் என் மேல் உம்மைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான்
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ (1)

மேல் தோன்றிப் பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றிரே (2)

கோவை மணாட்டி நீ உன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாயழகர் தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள ஆயிற்று நாணிலியேனுக்கே (3)

முல்லைப் பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழிநங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய் ஆனால் நானும் பிறந்தமை பொய் அன்றே (4)

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல் வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுகள் கேட்டுமே (5)

கணமா மயில்காள் கண்ண பிரான் திருக்கோலம் போன்று
அணிமா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன்
பணமாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே (6)

நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள் உம்மை
நடமாட்டம் காணப் பாவியேன் நான் ஓர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
உடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே (7)

மழையே! மழையே மண்புறம் பூசி உள்ளாய் நின்று
மெழுகு ஊற்றினாற் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப் பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்படத்
தழுவ நின்று என்னைத் ததர்த்திக் கொண்டு ஊற்றவும் வல்லையே (8)

கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகள் எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே (9)

நல்ல என் தோழி நாகணை மிசை நம் பரர்
செல்வர் பெரியர் சிறுமானிடவர் நாம் செய்வதென்
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே (10)

நாச்சியார் திருமொழி – தாமுகக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *