நாச்சியார் திருமொழி – கருப்பூரம் நாறுமோ

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே (1)

கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய அசுரர்
நடலைப்பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே (2)

தடவரையின் மீதே சரற்கால சந்திரன்
இடையுவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெரும் சங்கே (3)

சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்றின்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே (4)

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே (5)

போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே (6)

செங்கமல நாண்மலர் மேல் தேனுகரும் அன்னம் போல்
செங்கட் கருமேனி வாசுதேவனுடைய
அங்கைத் தலம் ஏறி அன்ன வசம் செய்யும்
சங்கரையா! உன் செல்வம் சால அழகியதே (7)

உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே (8)

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன் தன் வாய் அமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெரும் சங்கே (9)

பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண்புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே (10)

நாச்சியார் திருமொழி – விண்ணீல மேலாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *