நாச்சியார் திருமொழி – மன்னு பெரும்புகழ்

மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கிழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய் (1)

வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக்காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் ஊயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய் (2)

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய்தலை அற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்கும் காணேன்
போதலர் காவில் புது மணம் நாறப் பொறிவண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே! என் கருமாணிக்கம் வரக் கூவாய் (3)

என்புருகி இனவேல் நெடுங்கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோய் அது நீயும் அறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணியனை வரக் கூவாய் (4)

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடிசிலொடு பால் அமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே! உலகளந்தான் வரக் கூவாய் (5)

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும் முலையும் அழகழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும் இளங்குயிலே! என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறிலேனே (6)

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே! உனக்கென்ன மறைந்துறைவு? ஆழியும் சங்கும் ஒண்தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி (7)

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன்
நாங்கள் எம்மிலிருந்து ஒட்டியகச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே (8)

பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்து அகப்பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே! குறிக்கொண்டு இது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன்றேல் திண்ணம் வேண்டும் (9)

அன்றுலகம் அளந்தானை உகந்து அடிமைக்கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்திருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே!
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் (10)

விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுற என் கடல் வண்ணனைக் கூவு கருங்குயிலே! என்ற மாற்றம்
பண்ணுறு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே (11)

நாச்சியார் திருமொழி – வாரணமாயிரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *