நாச்சியார் திருமொழி – தெள்ளியார் பலர்

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே (1)

காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டம் இன்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப் பற்றி தன்னொடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே (2)

பூமகன் புகழ் வானவர் போற்றுதற்
காமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே (3)

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே (4)

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நன்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடைமா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே (5)

அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையினால்
செற்றவன் திகழும் மதுரைப் பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே (6)

அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே (7)

ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே (8)

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மாவலி தன் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே (9)

பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே (10)

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழற்கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே (11)

நாச்சியார் திருமொழி – மன்னு பெரும்புகழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *