/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ நாச்சியார் திருமொழி - வாரணமாயிரம்

நாச்சியார் திருமொழி – வாரணமாயிரம்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (1)

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ்
கோள் அரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் (2)

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (3)

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (4)

கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி
சதிர் இளமங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான் (5)

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் (6)

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய்சினமா களிறு அன்னான் என் கைப் பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் (7)

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் (8)

வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரி முகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (9)

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான் (10)

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே (11)

நாச்சியார் திருமொழி – கருப்பூரம் நாறுமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *