/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ நவதிருப்பதி ஸ்தலங்கள் - Thagavalkalam

நவதிருப்பதி ஸ்தலங்கள்

நவதிருப்பதி ஸ்தலங்கள்

ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி நதி கரையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிரக தோஷம் நீக்கக்கூடியதாகும்.

நவதிருப்பதி ஸ்தலங்கள்

  1. ஸ்ரீவைகுண்டம்
  2. நத்தம்
  3. திருப்புளியங்குடி
  4. தொலைவில்லி மங்கலம்
  5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி).
  6. பெருங்குளம்
  7. தென்திருப்பேரை
  8. திருக்கோளூர்
  9. ஆழ்வார் திருநகரி.

நவக்கிரக தோஷம் போக்கும் இந்த தலங்களில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வழிபாடு நடத்துவது சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிரக தோஷம் நீக்கக்கூடியதாகும்.

1. ஸ்ரீவைகுண்டம்

நவ திருப்பதிகளில் முதல் திருப்பதியான பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீவைகுண்டத்தில் வைகுண்ட நாதன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

ஒரு காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் இருந்து படைப்புத் தொழில் குறித்த ரகசியம் அடங்கிய ஏடுகளை ஒளித்து வைத்துக்கொண்டாராம். அந்த ஏடுகளை மீட்க தாமிரபரணி ஆற்றங்கரையில் விஷ்ணுவை நோக்கி பிரம்மா தவம் இருந்தார்.

கடும் தவம் செய்துகொண்டிருந்த பிரம்மாவுக்கு திருமால் நேரில் காட்சியளித்து படைப்புத் தொழில் குறித்த ரகசியத்தை சோமுகாசுரனிடமிருந்து மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும் என்று பிரம்மா வேண்ட திருமாலும் அப்படியே ஆகட்டும் என வைகுண்டநாதனாக நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காலதூஷகன் எனும் திருடன் திருடிய பொருளில் பாதியை ஸ்ரீவைகுண்டம் பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி வந்துள்ளான். ஒருநாள் திருடனின் கூட்டத்தினர் திருடச்சென்றபோது பிடிபட்டனர். உடனே திருடன் வைகுண்டநாதனிடம் சரணடைந்து தன்னை காக்க வேண்டினான். அதன்பொருட்டு வைகுண்டநாதனே அரண்மனைக்கு வந்து அரசனுக்கு தனது சுயரூபத்தைக்காட்டி, தர்மம் காக்க உன்னை தர்மத்தில் ஈடுபடச்செய்யவே நான் வந்தேன் என்று கூற, அரசனும் தனக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கும் கிடைக்க உற்சவ மூர்த்தியை கள்ளபிரான் என்று கூறி வழிபடதொடங்கினான்.

ஸ்ரீவைகுண்டத்தில் மூலவர் வைகுண்டநாதனாகவும், உற்சவர் கள்ளபிரானாகவும் எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இது சூரியகிரக‌ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

2. வேதவிக்கு காட்சி கொடுத்த தலம்

நவ திருப்பதியின் 2-வது திருப்பதி நத்தத்தில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவரகுணமங்கை எனப்படும் நத்தத்தில், மூலவர் விஜயாசன பெருமாள் ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலத்தில் தாயார்கள் வரகுண வல்லித் தாயர், வரகுண மங்கைத் தாயாருடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இது சந்திரகிரக‌ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

திருவரகுணமங்கையில் வேதவி என்பவர் தன் மாதா, பிதா, குரு ஆகியோருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆசன மந்திரத்தை ஜெபித்து கடும் தவம் புரிந்தார். அப்போது திருமால் அங்கு தோன்றி வேதவிக்கு காட்சியளித்தார். திருமாலின் அருள் பெற்று வேதவி பரம பதம் அடைந்தார்.

ஆச‌ன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் விஜயாசனர் என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது. இத்திருப்பதியில் உயில் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

3. பூமி தேவியை சமாதானம் செய்த தலம்

நவதிருப்பதியின் அடுத்த தலம் திருப்புளியங்குடியில் உள்ளது. திருவரகுண மங்கையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் திருப்புளியங்குடியில் மூலவர் காய்சினவேந்தன், தாயார் மலர்மகள், திரு மகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

திருமால் லட்சுமி தேவியுடன் நதிக்கரையில் தனித்திருந்த போது, தன்னை திருமால் கண்டுகொள்ளாதிருக்கிறாரோ என பூமாதேவி சினங்கொண்டு பாதாள லோகம் செல்ல திருமால் அங்கு சென்று பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து இருவரும் சமமே என இரு தேவியருடனும் திருமால் இங்கு எழுந்து காட்சியளிக்கிறார்.

பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால், பூமிபாகர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு. இது புதன்கிரக‌ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

4. பெருங்குளம்

நவதிருப்பதியில் 4 வது தலம். திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் பெருங்குளத்தில் மூலவர் வேங்கட வாணனாகவும், உற்சவர் மாயக்கூத்தன் தாயார் அலமேலுமங்கை, குழந்தைவல்லி தாயாருடன் அருள் பாலிக்கிறார்.

பெருங்குளத்தில் வசித்து வந்த வேதசாரண் குமுதவல்லி தம்பதியினரின் மகள் கமலாவதி, தான் திருமணம் செய்தால் பெருமாளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி, பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தார். பெருமாளும் நேரில் தோன்றி தன்னுடைய மார்பில் கமலாவதியை ஏற்றுக்கொண்டார்.

ஒரு சமயம் வேதாசாரண் மனைவி குமுதவல்லியை அச்மசாரன் என்னும் அரக்கன் கவர்ந்து சென்றான். குமுதவல்லியை அரக்கனிடமிருந்து பெருமாள் மீட்டுவந்தார். பெருமாளுடன் அரக்கன் போரிட்டான். அரக்கனை நர்த்தனம் செய்து அவனை வதம் செய்ததால், மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது. இது சனி கிரக‌ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

5. தொலைவில்லி மங்கலம் தெற்குகோவில் (இரட்டைதிருப்பதி)

பெருங்குளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் மங்களகுறிச்சியில் இருந்து வலது புறமாக திரும்பி 2 கிலோமீட்டர் மேற்கு நோக்கி வந்தால், இரட்டை திருப்பதி ஸ்தலங்கள்.

தெற்கு கோவிலில் மூலவர் தேவபிரான், உற்சவர் ஸ்ரீனிவாசன், தாயார் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார். ஆத்ரேயசுப்ரபர் என்ற ரிஷி யாகம் செய்வதற்காக இத்தலத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, பூமியில் புதையுண்டு கிடந்த மிக ஒளிமயமான ஒரு வில்லையும் தராசையும் எடுத்தார்.

அவர் கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறியது. இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும் தராசாகவும் மாறி இத்தல மண்ணில் புதையுண்டு கிடந்ததாக கூறி பரமபத முக்தி அடைந்ததால் இத்தலம் தொலைவில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது. இத்தலம் ராகு தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

6. தொலைவில்லி மங்கலம் வடக்கு கோவில் (இரட்டை திருப்பதி)

தெற்கு கோவிலில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வடக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் அரவிந்த லோசனார் வீற்றிருந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். உற்சவர் செந்தாமரைக் கண்ணன் தாயார் கருத்தடங்கண்ணியுடன் எழுந்தருளியுள்ளார்.

தினமும் தேவபிரானுக்கு வடக்கு தடாகத்தில் இருந்து சுப்ரபர் தாமரை மலர்களை எடுத்து வந்து பூஜித்து வந்தார். ஒரு முறை சுப்ரபர் எங்கிருந்து தாமரை மலர்களை கொய்து கொண்டு வருகிறார் என்பதை பார்ப்பதற்காக, பின் தொடர்ந்து சென்றார்.

இதை அறிந்த சுப்ரபர் தன்னை பின் தொடர்வதற்கான காரணம் கேட்க தேவ பிரானோடு சேர்த்து தனக்கும் அபிஷேகம் செய்ய பெருமாள் கூறியதால், அங்கேயும் ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து சுப்ரபர் பூஜைகள் செய்து வந்தார். அந்த பெருமாளே செந்தாமரைக் கண்ணனாக காட்சி அளிக்கிறார். இது கேது கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

7. தென்திருப்பேரை

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் தென் திருப்பேரை உள்ளது. இங்கு மூலவர் மகர நெடுங்குழைக்காதர் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். உற்சவர் நிகரில் முகில் வண்ணன், தாயார் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

துர்வாச முனிவரின் சாப விமோசனம் பெறுவதற்காக பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்தார். பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் போது இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்க திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்தார். அப்போது தேவர்கள் பூமாரி செரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமாதேவி தவமிருந்ததால் இவ்வூர் ஸ்ரீபேரை என்றழைக்கப்பட்டது. இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் இன்று வரை பெய்ப்பதில்லை. இது சுக்கிர கிரகதோக‌ நிவர்த்தி ஸ்தலம்.

8. திருக்கோளூர்

தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வாரிதிருநகரி செல்லும் வழியில் 3 கிலோமீட்டர் மேற்காக வந்து இடது புறம் செல்லும் ரோட்டில் திரும்பி 2 கிலோமீட்டர் சென்றால் திருக்கோளூர். இது மதுரகவி ஆழ்வார் அவதார தலம். இங்கு மூலவர் வைத்தமாநிதி பெருமாள், உற்சவர் நிக்சோவித்தன், தாயார் குமுத வல்லி, கோளூர் வல்லி ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

குபேரன் சிவனை வழிபட கைலாயம் சென்றபோது அங்கே பார்வதியை கெட்ட நோக்கத்தோடு பார்த்தானாம். உடனே பார்வதி கோபம் கொண்டு குபேரனை சபித்தாள். உடனே குபேரனின் உடல் விகாரமானது. குபேரன் தன் தவறை உணர்ந்து பார்வதியை அடி பணிந்தான். பார்வதி கோபம் தணியாதவளாய் குபேரனை பார்த்து உன் உடல் விகாரம் மாறாது. இனி உனக்கு ஒரு கண் தெரியாது. நீ இழந்த நிதிகளை அவை தஞ்சம் அடைந்துள்ள வைத்தமாநிதி பெருமாளிடம் தவம் செய்து பெற்றுக் கொள் என்று கூறினாள்.

குபேரன் திருக்கோளூர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து இழந்த நிதியில் பாதியை பெற்றான். எனவே இழந்த செல்வத்தை பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம். இது செவ்வாய் கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

9. ஆழ்வார் திருநகரி (திருக்குருகூர்)

திருமாலிடம் பிரம்மா தவம் இருக்க இடம் கூறுமாறு வேண்டினார். அதற்கு திருமால் நான் உன்னை படைப்பதற்கு முன்பே தாமிரபரணி நதிக்கரையில் யாம் எழுந்தருளி உள்ளோம் என்று கூறினார். திருமால் கூறிய இடமான ஆழ்வார் திருநகரி பெருமாள் ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால் ஆதிநாதன் என திருநாமம் ஏற்பட்டது.

திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடமாகியதால் குருகூர் என அழைக்கப்படுகிறது. ஆற்றில் வந்த சங்கு இப்பெருமானை வழிபட்டு மோட்சம் பெற்றதால், சங்கின் மறுபெயரான குருகு என்பதில் இருந்து குருகூர் என்று அழைக்கப்படுகிறது. சங்கு மோட்சம் பெற்ற தலம் இன்றும் திருச்சங்கண்ணிதுறை என்று அழைக்கப்படுகிறது.

வராக‌ அவதாரம் காண முனிவர்கள் இத்தலத்தில் தவமிருந்து அவர்களுக்கு பிராட்டியுடன் வராக‌ நாராயணன் காட்சி அளித்ததால் வராக‌ ஷேத்திரம் எனவும், நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்தகரை என்பதால் தீர்த்த ஷேத்திரம் எனவும், பஞ்ச மஹா ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது. இது வியாழ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *