பங்குனி மாதத்தில் பவுர்ணமி தினமும் உத்திர நட்சத்திரமும் இணைந்து வரும் புனிதமான நாளையே நாம் பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம்.
பங்குனி உத்தரம்
தமிழ் மாத கடைசி மாதமான பங்குனியில், பன்னிரண்டாவது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனித நாள் தான் பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நமது வாழ்வில் குறையா செல்வம் சேரும், திருமண தடை அகன்று திருமணம் கை கூடும்.
அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள சைவ சமயத்தவர்கள் கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் கொண்டுவந்து, பழனியில் நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள்.
பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.
பங்குனி உத்திர விரதம்
பலருக்கும் திருமணம் என்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இப்படி திருமணத்தடை இருப்பவர்கள் பங்குனி உத்திர நாள் அன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் உடனே திருமணம் கைகூடி வரும். மனதிற்குப் பிடித்தவரை மணந்து கொள்வதற்கு பங்குனி உத்திர விரதம் இருப்பது சிறப்பான பலனாக அமையும். நாம் வழிப்படும் பெரும்பான்மையான தெய்வங்களுக்கு இந்த நாளில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குனி உத்திர நாளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். அன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.
வேலையில் உள்ளவர்கள் ‘ஓம் சரவண பவ’ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறை சிந்தனையிலேயே இருக்கும். அன்று ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
இதையும் படிக்கலாம் : முருகன் 108 போற்றி
பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்
பங்குனி மாதம் பவுர்ணமி திதியோடு உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளான பங்குனி உத்திரம் திருநாளில் தான் அநேகர தெய்வீக திருமணங்கள் நடந்தேறியுள்ளன. இந்நாளைக் கல்யாண விரதம் என்றும் அழைப்பர்.
உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன் அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன.
பங்குனி உத்திரம் இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடக்க உள்ளன.
சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இந்நாளில்தான். அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக செய்து வருகின்றனர்.
முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.
சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இந்த நாளில்தான்.
மீனாட்சி- சுந்தரேஸ்வரர் பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்தப் பங்கு உத்திரத்தன்றே. நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது, மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது, சரஸ்வதி பிரம்மதேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதெல்லாம் பங்குனி உத்திர தினத்தன்றுதான்.
காஞ்சியில் காமாட்சி – ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள்.
கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்ந்தத் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடையாது.
மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.
இந்நாளில் மற்ற வைணவ ஆலயங்களிலும் மணக்கோலத்தில் தாயாரும் பெருமாளும் காட்சி தருவார்கள். மேலும், காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார்.
பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த விரதத்தை கடை பிடித்துதான் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மனைவியான இந்திராணியையும், படைத்தல் கடவுளான பிரம்மன் தனது மனைவி யான சரஸ்வதியையும் பெற்றார்.
பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். அது போல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம் தான்.
பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சியருளை தருபவர்கள். அதனாலேயே அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கிக் கொள்கிறோம். இதனால், பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.
காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியத்தை தரும்.
42 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.
பங்குனி உத்திரவிரதம் மேற்கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும்.
அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.