
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு
வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை – பவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ
பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு – சதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு
ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக – ழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் – புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு
வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி – முருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ்
மங்க ளாயிசந் தானசிவ காமியுமை – யருள்பாலா
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச
கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர – அணைவோனே
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்
கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பாரியான கொடை (பழனி) – திருப்புகழ் 175