
பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ
வடிவமார் புளகித கும்ப மாமுலை
பெருகியே யொளிசெறி தங்க வாரமு – மணியான
பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை
அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ
பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ – வருமானார்
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை
மனையிலே வினவியெ கொண்டு போகிய
யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் – மயலாலே
உருகியே யுடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதக
னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம – தருள்வாயே
அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ
கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ
அடலதோ டமர்புரி கின்ற கூரிய – வடிவேலா
அரகரா வெனமிக அன்பர் சூழவெ
கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ
அவனியோர் நொடிவரு கின்ற காரண – முருகோனே
பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ
உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ
பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் – மருகோனே
பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ
வனசமா மலரினில் வண்டு லாவவெ
பழநிமா மலைதனி லென்று மேவிய – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : போதகம் தரு (பழனி) – திருப்புகழ் 179