தைப்பொங்கல் வரலாறு

தமிழர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடினாலும், தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகை தை முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப் பொங்கல் தான். இது தமிழ் மக்களின் பாரம்பரிய கலாச்சார விழாவாகும். தமிழ் மக்கள் தங்கள் நன்றியை தன்னலமின்றி வெளிப்படுத்துகிறார்கள். கடின உழைப்பாளிகள் என்பதால், இயற்கைக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.

தைப்பொங்கல் வரலாறு

pongal

தை மாதம் என்பது ஆடி மாதத்தில் விதைக்கப்பட்ட பயிர்கள் அறுவடையாகும் பருவமாகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் செய்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து சாப்பிட்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் அதிகம் உள்ள பகுதிகளில் மூன்று வகையான விவசாயம் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு மூலம் ஒரு பயிர் மட்டுமே விளையும். எனவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாதத்தில் அறுவடை நடவடிக்கைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன.

அறுவடை முடிந்து கிடைத்த புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகளான அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் என்பது பொருள். பொங்குவதால் பொங்கல்.

பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படும்

போகிப்பண்டிகை

bhogi

போகிப்பண்டிகை என்பது தமிழர்களால் பொங்கலின் முதல் நாளிலும், மார்கழியின் கடைசி நாளிலும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். திருவிழாவின் போது மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை எரித்தனர். பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகியாகும். அறுவடைக்கு முடிந்து பிறக்கும் ஆண்டு புதியதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். நமது கெட்ட நேரங்கள் மற்றும் கெட்ட எண்ணங்கள் அனைத்தும் இந்த நெருப்பில் எரிக்கப்பட வேண்டும். பிறந்த வருடம் நமக்கு நல்ல எண்ணங்களையும் நல்ல பலனையும் தர வேண்டும் என்று நினைத்து போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்.

சூரியப் பொங்கல்

pongal

உழைக்கும் மக்கள் மற்றும் பிற உயிரினங்களின் கடவுளான கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரியப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி, புதிய பானைகள் மற்றும் புதிய அடுப்புகளுடன் சூரியனை பார்த்து பொங்கல் வைப்பார்கள். பானையில் புதிதாகப் பறிக்கப்பட்ட மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகள் கட்டப்பட்டிருக்கும். அறுவடை செய்யப்பட்ட செடிகள், கொடிகள், காய்கறிகள் மற்றும் கிழங்குகளை ஒன்றாகச் சமைத்து சூரியனுக்குப் படைக்கிறார்கள். தமிழர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பொங்கல் கரும்பும்சூரியனுக்கு வழங்கப்படுகிறது. இது சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை மட்டுமல்ல, காற்று, வானம், பூமி, நீர் ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் நன்றி சொல்லும் பண்டிகையாகும்.

பச்சை நெற்களை அரைத்து தவிடு நீக்காமல் தண்ணீர் சேர்த்து வைக்கப்படும் பருப்புக் குழம்புடன் படையலிட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம்! சூரிய பகவானை மனதார கும்பிட்டு படையலிட்டால் நிச்சயம் வாழ்வில் வெளிச்சம் வரும்.

மாட்டுப் பொங்கல்

mattu pongal

மாட்டுப் பொங்கல் விவசாயத்திற்கு உதவும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் இந்த மாட்டுப் பொங்கல். இந்த பொங்கல் பண்டிகை இரண்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் அன்று தொழுவத்தில் உள்ள மாடுகளை குளிக்க வைத்து மாடுகள் அனைத்துக்கும் கொம்புகளில் வண்ணம் தீட்டப்பட்டு பொட்டு வைத்து தோரணம் கட்டி அலங்காரம் செய்து வைக்கப்படும் பொங்கலே மாட்டு பொங்கலாகும். வைத்த பொங்கலை மாடுகளுக்கு கொடுப்பார்கள்.

இன்றும் கிராமப்புறங்களில் வாகனங்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கால்நடைகளை ஊர்வலமாகப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு கால்நடை வளர்க்கும் குடும்பமும் நிலத்தில் விவசாயம் செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கலைக் கொண்டாடுகிறது.

காணும் பொங்கல்

kaanum pongal

தை மாதம் 3-ம் நாளில் தமிழர்கள் காணும் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். கண்ணு பொங்கல் கன்னி பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையின் போது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பது மற்றும் பெரியவர்களிடம் ஆசி பெறுவது ஆகியவை அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளை இந்த நாளில் கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல் அன்று மக்கள் பீச், தியேட்டர், பார்க், மற்ற பிற சுற்றுலாத் தலங்களுக்கு சென்றும் கொண்டாடுவார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *