
இராணிப்பேட்டை தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைமை இடம் இராணிப்பேட்டை. முன்பு இது வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2019 ஆகஸ்ட் 15-ல் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்தது. தமிழ்நாட்டின் 36-வது மாவட்டமாக 2019 நவம்பர் 28-ல் தமிழக முதல்வர் முறைப்படி ராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார்.
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
பகுதி | வட மாவட்டம் |
பரப்பளவு | 2234.32 ச.கி.மீ |
மக்கள்தொகை (2011) | 12,10,277 |
அஞ்சல் குறியீடு | 632 xxx |
தொலைபேசி குறியீடு | 04172 |
வாகனப் பதிவு | TN-73 |
வரலாறு
கி.பி 1714-ம் ஆண்டு அக்டோபர் 30 அன்று, செஞ்சியின் மன்னர் ராஜா ஜெய்சிங் என்ற தேசிங்கு கப்பம் கட்ட மறுத்ததால் ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான் அவர் மீது போர் தொடங்கினார். அப்போரில் ராஜா தேசிங்கு வீர மரணமடைந்தார். இதைக் கேள்விப்பட்ட அவரது மனைவி ராணிபாய் உடன் கட்டை ஏறி தன் உயிரை விட்டார்.
இவர்களின் தியாகத்தை பாராட்டிய நவாப், பாலாற்றங்கரையில் இருவருக்கும் பளிங்கால் நினைவிடங்கள் கட்டினார். மேலும், ராணிபாயின் கற்பை போற்றும் வகையில் 1771-ல் ராணிப்பேட்டை என்ற ஊரை உருவாக்கினார். அன்று முதல் இன்று வரை 308 ஆண்டுகளாக இந்த ஊர் ராணிப்பேட்டை என்றே அழைக்கப்படுகிறது.
ஐரோப்பியர்கள் இங்கு முகாம் அமைத்த பிறகு இந்த ஊர் வளர்ச்சி பெற்றது. இராணிப்பேட்டைக்கு அருகில் 4.8 கி.மீ பரப்பில் “நவ்லாக் பண்ணை” என்ற பெரிய தோப்பு உள்ளது. இதில் 9 லட்சம் மரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தமிழக முதல்வர் ராணிப்பேட்டையை புதிய மாவட்டமாக அறிவித்தார். நவம்பர் 28 அன்று இதன் துவக்க விழா நடந்தது. நவம்பர் 29 முதல் தமிழகத்தின் 36வது மாவட்டமாக இராணிப்பேட்டை செயல்பட ஆரம்பித்தது.
அமைவிடம்
இராணிப்பேட்டை மாவட்டம் எல்லைகளில் தெற்கே திருவண்ணாமலை, கிழக்கே காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர், மேற்கே வேலூர், வடக்கே ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் உள்ளன.
மக்கட் தொகை
2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின் படி, இந்த மாவட்டத்தில் 12,10,277 பேர் வாழ்கின்றனர். இங்கு 100 பேரில் 90 பேருக்கு படிக்கத் தெரியும். 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் இருக்கிறார்கள்.
6 வயதுக்கு கீழே 5124 குழந்தைகள் உள்ளனர். 1000 ஆண் குழந்தைகளுக்கு 998 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இங்கு வாழும் மக்களில் 76% பேர் இந்துக்கள். 15% பேர் கிறித்தவர்கள். 8% பேர் முஸ்லிம்கள். 1% குறைவான தமிழ்ச் சமணர்களும் மற்றவர்களும் உள்ளனர்.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டம், 6 வருவாய் வட்டங்கள், 400 வருவாய் கிராமங்கள் கொண்டுள்ளது.
வருவாய் கோட்டம்
- இராணிப்பேட்டை
- அரக்கோணம்
வருவாய் வட்டங்கள்
- ஆற்காடு
- வாலாஜாபேட்டை
- கலவை
- சோளிங்கர்
- அரக்கோணம்
- நெமிலி
உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம்
இம்மாவட்டம் 6 நகராட்சியும், 8 பேரூராட்சிகளும், 7 ஊராட்சி ஒன்றியகளும், 288 கிராம ஊராட்சிகளும் கொண்டுள்ளது.
நகராட்சிகள்
- அரக்கோணம்
- இராணிப்பேட்டை
- வாலாஜா
- ஆற்காடு
- மேல்விஷாரம்
- சோளிங்கர்
பேரூராட்சிகள்
- காவேரிபாக்கம்
- திமிரி
- கலவை
- நெமிலி
- தக்கோலம்
- பனப்பாக்கம்
- விளாப்பாக்கம்
- அம்மூர்
ஊராட்சி ஒன்றியங்கள்
- அரக்கோணம்
- நெமிலி
- காவேரிபாக்கம்
- சோளிங்கர்
- வாலாஜா
- ஆற்காடு
- திமிரி
அரசியல்
இந்த மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேலும் 1 மக்களவைத் தொகுதியும் இங்கு உள்ளது.
சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்றத் தொகுதிகள்
தொழில்கள்
இராணிப்பேட்டை தென்னிந்தியாவின் முக்கிய தொழில் ஊர். இங்கே தோல் பொருட்கள், காலணிகள், ஆடைகள் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். பெரிய தோல் தொழிற்சாலைகளும், நடுத்தர தோல் தொழிற்சாலைகளும் நிறைய உள்ளன. இதோடு சிறிய தொழிற்சாலைகளும் உள்ளன. இவற்றில் ரசாயனப் பொருட்கள், தோல் பொருட்கள், கருவிகள் செய்கிறார்கள். இந்தத் தொழில்கள் தான் இந்த ஊரின் முதன்மையான தொழிலாக உள்ளது.
இராணிப்பேட்டை சுற்றுலா தலங்கள்
மகேந்திரவாடி

அரக்கோணம் பகுதியில் உள்ள மகேந்திரவாடியில் மகேந்திர விஷ்ணுகிருகம் என்ற குகைக் கோயில் இருக்கிறது. இது முக்கியமான வரலாற்றுச் சின்னமாகும். இச்சின்னத்தினை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.
இந்த குகைக் கோயில் தமிழ்நாட்டின் மிகப் பழைய குகைக் கோயில்களில் ஒன்று. இதை மகேந்திரவர்மன் என்ற பல்லவ மன்னன் கி.பி. 600 முதல் 630-ஆம் ஆண்டு காலத்தில் உருவாக்கினார். கோயிலுக்கு மகேந்திர விஷ்ணுகிருகம் என்று பெயர் வைத்தார் என்பதை இங்கு உள்ள பழைய கல்வெட்டு சொல்கிறது.
திறந்த வெளியில் தனியாக இருக்கும் ஒரு பாறையைக் குடைந்து இந்தக் கோயில் செய்யப்பட்டுள்ளது. இரண்டு முழு தூண்களும், இரண்டு பாதி தூண்களும் மிகவும் எளிய முறையில் இக்குடவரை குடையப்பட்டுள்ளது. தூண்களின் மேற்பகுதி (போதிகை) மிக எளிமையாக செதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சனகிரி மலை

ராணிப்பேட்டை நகரத்தில் காஞ்சனகிரி மலை உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் உள்ள சிறிய மலை. பச்சைப் பசேல் என்று இருக்கும் இந்த மலையில் சிவன் கோயிலும் முருகன் கோயிலும் உள்ளன. இங்கே ஒரு சுவாரசியமான பாறை உள்ளது. அதை தட்டினால் மணி அடிப்பது போல சத்தம் வரும். இது தான் இம்மலையின் சிறப்பு.
இரத்தினகிரி பாலமுருகன் கோயில்

இரத்தினகிரி மலையில் மீது பாலமுருகன் கோயில் இருக்கிறது. இங்கே முருகப்பெருமான் இரு கோலங்களில் காட்சி தருகிறார். முதல் காட்சியில் வள்ளி தெய்வானையுடன் இருக்கிறார். இரண்டாவது காட்சியில் குருவாக இருக்கிறார். கிரானைட் கற்கலால் செய்த தேரின் மேல் முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. சோழர்கால சிற்பக்கலை வடிவில் கற்பக்கிரகம் கிரானைட் கற்கலால் கட்டப்பட்டுள்ளது.
கோயிலின் சுவர்களில் பல தெய்வங்களின் சிலைகள் உள்ளன. அவை விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகியவை. விநாயகருக்கு இரண்டு கோயில்கள் உள்ளன – ஒன்று கீழே, மற்றொன்று மலை உச்சியில்.
இந்த கோயிலை 14-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் கட்டினார். 1980-இல் பாலமுருகனடிமை சுவாமி இதை புதுப்பித்தார். இங்கே எல்லா பூஜைகளும் தமிழில் நடக்கின்றன. இந்த கோயிலை அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கிறது.
லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் – சோளிங்கர்

வேலூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் இந்த கோயில் இருக்கிறது. பெருமாள் அருள்பாலிக்கும் 108 திவ்ய தேசங்களில் இது 65வது தலம். இங்கே நரசிம்மரும் ஆஞ்சநேயரும் தியான நிலையில் அமர்ந்திருப்பது தனிச்சிறப்பு. சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் பெருமாள் காட்சி தருகிறார்.
மலைக்கோயில் 200 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்டது. ஒரு ஏக்கர் அளவுள்ள இக்கோயில் 750 அடி உயரத்தில் சுமார் 1305 படிகள் உள்ளன. இங்கே பெரிய மலை, சின்ன மலை என இரண்டு மலைகள் இருக்கின்றன.
ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள்
ராணிப்பேட்டை பாலாற்றின் கரையில் இரண்டு மணிமண்டபங்கள் உள்ளன. இவை மன்னர் தேசிங்கு, அவர் மனைவி ராணிபாய் ஆகியோரின் நினைவாக கட்டப்பட்டவை. முன்பு இப்பகுதியில் ஆங்கிலப் படைகள் தங்கியிருந்தன.
மன்னர் தேசிங்கு ஆற்காடு நவாப்புக்கு கப்பம் கட்ட மறுத்தார். இதனால் கோபமடைந்த நவாப்பின் படை செஞ்சிக்கோட்டை மீது தாக்குதல் நடத்தி மன்னரைக் கொன்றது. மன்னரின் உடல் எரிக்கப்பட்ட போது, ராணிபாயும் உடன்கட்டை ஏறினார்.
இந்த நிகழ்வால் மனம் வருந்திய ஆற்காடு நவாப் சதாத்துல்லாகான், பாலாற்றின் மறுகரையில் இரு அழகிய மணிமண்டபங்களைக் கட்டினார். ராணிபாயின் தியாகத்தை நினைவுபடுத்த இந்த ஊருக்கு ‘ராணிப்பேட்டை’ என்று பெயர் வைத்ததாக வரலாறு கூறுகிறது.
ராணிப்பேட்டையில் பிரபலமான உணவுகள்
ஆற்காடு பிரியாணி

தமிழகத்தின் மிகச் சுவையான பிரியாணி ஆற்காடு பிரியாணி. இதை ஆற்காட்டு நவாப்கள் நமக்கு கொடுத்த நல்ல உணவு. இந்த பிரியாணி சுவைக்கு முக்கிய காரணம் சீரக சம்பா அரிசியும், அதை சமைக்கும் விதமும் தான்.
மக்கன் பேடா

ஆற்காடு நகரத்தில் “மக்கன் பேடா” என்ற பழைய இனிப்பு வகை உள்ளது. பல தலைமுறைகளாக இந்த இனிப்பு புகழ்பெற்று விளங்குகிறது.
இந்த இனிப்பை செய்ய மைதாவும் சர்க்கரையும் சேர்ப்பதில்லை. பால்கோவாவை மட்டும் பயன்படுத்தி எலுமிச்சம் பழம் அளவு உருண்டைகள் செய்வார்கள். இந்த உருண்டைக்குள் உலர் பழங்களை வைப்பார்கள். பிறகு எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து, சர்க்கரைப் பாகில் 10 மணி நேரம் ஊற வைப்பார்கள்.
இந்த இனிப்பு குலாப் ஜாமுன் போல சுவை இருக்கும். இதன் உள்ளே வைக்கப்படும் முந்திரி, திராட்சை, பூசணி விதை, வெள்ளரி விதை போன்றவை இதற்கு தனி சுவையைத் தருகின்றன.