சருவும்படி (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 14

சருவும்படி வந்தனன் இங்கித
மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின் – வசமாகிச்

சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட – திறமாவே

இரவும்பகல் அந்தியு நின்றிடு
குயில்வந்திசை தெந்தன என்றிட
இருகண்கள்து யின்றிட லின்றியும் – அயர்வாகி

இவணெஞ்சுப தன்பதன் என்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் – அடைவேனோ

திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் – பயில்வோர்பின்

திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் – மருகோனே

மருவுங்கடல் துந்திமி யுங்குட
முழவங்கள்கு மின்குமி னென்றிட
வளமொன்றிய செந்திலில் வந்தருள் – முருகோனே

மதியுங்கதி ரும்புய லுந்தின
மறுகும்படி அண்டம்இ லங்கிட
வளர்கின்றப ரங்கிரி வந்தருள் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : தடக்கைப் பங்கயம் (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *