
சினத்தி லத்தினை சிறுமண லளவுடல்
செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
செனித்த தெத்தனை திரள்கய லெனபல – வதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ – தளவேதோ
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
வதைத்த தெத்தனை யளவிலை விதிகர – மொழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
மடைக்கு லத்தனை மதியழி விரகனை
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் – புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன
திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு – தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித்த மத்தள தமருக விருதொலி – கடல்போலச்
சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை – பொரும்வேலா
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
திருத்த ணிப்பதி மருவிய குறமகள் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : சொரியும் முகிலை (திருத்தணிகை) – திருப்புகழ் 271