தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
சிவனை பற்றி சில தகவல்கள்
திருநீறு, ருத்ராட்சம், ‘நமசிவாய’ மந்திரம் போன்றவை, சிவச் சின்னங்களாக போற்றப்படுகின்றன.
சிவபெருமான் தனது உடலில் பாதியை பார்வதி தேவிக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக நின்ற திருத்தலம் ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில்’ஆகும்.
சிவபெருமான் யோகியாக இருந்து அருள்பாலிக்கும் கோலத்தை ‘தட்சிணாமூர்த்தி’ என்கிறார்கள்.
எமதர்மனை வதம் செய்து, காலசம்ஹார மூர்த்தியாக அருளும் ஈசனை, திருக்கடையூரில் தரிசிக்கலாம்.
திருஞானசம்பந்தருக்காக, நந்தியை விலகி இருக்கும்படி சிவன் உத்தரவிட்ட தலம், பட்டீஸ்வரம்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில், ‘முக்திவாசல்’ என்று போற்றப்படுகிறது. இது நவக்கிரகங்களில் புதன் தலமாகவும் திகழ்கிறது.
பார்வதி தேவி, மயில் வடிவில் இருந்து சிவபெருமானை பூஜித்த தலம், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
தட்சிணாமூர்த்தி தனது வலது கை பெருவிரலையும், ஆட்காட்டி விரலையும் இணைத்து, மற்ற மூன்று விரல்களையும் நிமிர்த்தி வைத்திருக்கும் முத்திரைக்கு, ‘சின் முத்திரை’ என்று பெயர்.
ஊழ்வினையின் பயனாக வேடுவ குலத்தில் பிறந்த பார்வதியை, சிவபெருமான் வேடனாக வந்து மணந்த திருத்தலம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் ஆகும்.
சிவபெருமானின் நடனத்தை காணும் பேறுபெற்ற பெண் அடியார், காரைக்கால் அம்மையார்.
சிவலிங்கத் திருமேனியை, அன்னத்தைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபடும் அன்னாபிஷேகம், ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் நடைபெறும்.
யானைகள் ஏற முடியாதபடி அமைக்கப்பட்ட ஆலயங்களை, ‘மாடக்கோவில்’ என்று அழைப்பார்கள். இப்படி ஈசனுக்காக பல மாடக் கோவில்களை கட்டியவர், கோச்செங்கட் சோழன்.
நடனம் புரியும் நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் என்ற அசுரன், ஆணவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறான்.
இதையும் படிக்கலாம் : சிவபெருமானின் 19 அவதாரங்கள்..!
திருமூலர் பாடிய திருமந்திரம், 3 ஆயிரம் பாடல்களால் ஆனது. இது 10-வது திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படும் திருமூலர், ஆண்டொன்றுக்கு இறைவன் மீது ஒரு பாடலைப் பாடியதாகச் சொல்வார்கள்.
கயிலாயத்தில் தேவலோக பெண்களுடன் காதல் வயப்பட்டதன் காரணமாக, பூலோகத்தில் மனிதப் பிறவி எடுத்தவர் ‘சுந்தரமூர்த்தி சுவாமிகள்.’
கயிலையில் சிவபெருமானின் பக்கத்தில் பார்வதி தேவியும் இணைந்து அமர்ந்திருந்ததால், வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்து தரிசனம் செய்தவர் ‘பிருங்கி’முனிவர்.
தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம் சிதம்பரம். வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம் காசி. இவையே சிவனை பற்றி சில தகவல்கள் ஆகும்.