குறள் 311 :
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
மு.வரதராசனார் உரை
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
மு.கருணாநிதி உரை
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
மணக்குடவர் உரை
மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது.
குறள் 312 :
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
மு.வரதராசனார் உரை
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
மு.கருணாநிதி உரை
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை
நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
மணக்குடவர் உரை
தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.
குறள் 313 :
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
மு.வரதராசனார் உரை
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
மு.கருணாநிதி உரை
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.
சாலமன் பாப்பையா உரை
நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.
மணக்குடவர் உரை
தானொரு குற்றஞ் செய்யாதிருக்கத் தனக்கு இன்னாத வற்றைச் செய்தவர்க்கும், இன்னாதவற்றைச் செய்யின் அஃது உய்வில்லாத நோயைத்தரும். இது காரணமின்றி இன்னாதன செய்தவர்க்கும் பொல்லாங்கு செய்தலைத் தவிரவேண்டுமென்றது.
குறள் 314 :
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
மு.வரதராசனார் உரை
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
மு.கருணாநிதி உரை
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
சாலமன் பாப்பையா உரை
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
மணக்குடவர் உரை
இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் நெறி கூறியது.
குறள் 315 :
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
மு.வரதராசனார் உரை
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
மு.கருணாநிதி உரை
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.
சாலமன் பாப்பையா உரை
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.
மணக்குடவர் உரை
பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. இஃது அறிவுடையார் செய்யார் என்றது.
குறள் 316 :
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
மு.வரதராசனார் உரை
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
மு.கருணாநிதி உரை
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.
மணக்குடவர் உரை
தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும். இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.
குறள் 317 :
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
மு.வரதராசனார் உரை
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.
மு.கருணாநிதி உரை
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
சாலமன் பாப்பையா உரை
எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.
மணக்குடவர் உரை
யாதொன்றாயினும், எல்லா நாளும் யாவர்மாட்டும் இன்னாதவற்றை மனத்தினாலும் செய்யாமை நன்று.
குறள் 318 :
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
மு.வரதராசனார் உரை
தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.
மு.கருணாநிதி உரை
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.
சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?.
மணக்குடவர் உரை
தன்னுயிர்க்கு உற்ற இன்னாமையை உயிரில்லாப் பொருள்கள் போல அறியாது கிடத்தலன்றித் தான் அறியுமவன், பின்னைப் பிறவுயிர்க்கு இன்னாதவற்றைச் செய்கின்றது யாதினைக் கருதியோ?.
குறள் 319 :
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
மு.வரதராசனார் உரை
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
மு.கருணாநிதி உரை
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.
சாலமன் பாப்பையா உரை
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
மணக்குடவர் உரை
பிறர்க்கு இன்னாதவற்றை முற்பொழுது செய்யின், தாமே பிற்பொழுது தமக்கு இன்னாதனவாய் வரும்: மற்றொருவன் செய்யாமல். இன்னாதன செய்ததனால் வருங் குற்றமென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.
குறள் 320 :
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
மு.வரதராசனார் உரை
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
மு.கருணாநிதி உரை
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
சாலமன் பாப்பையா உரை
செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
மணக்குடவர் உரை
இக்காலத்து நுகர்கின்ற துன்பமெல்லாம் முற்காலத்துப் பிறர்க்குத் துன்பம் செய்தார் மாட்டே யுளவாம்: ஆதலால் இக்காலத்துப் பிறர்க்கு துன்பத்தைச் செய்யார் வருங்காலத்துத் தமக்குத் துன்பம் வாராமையை வேண்டுபவர்.