குறள் 341 :
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
மு.வரதராசனார் உரை
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
மு.கருணாநிதி உரை
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.
சாலமன் பாப்பையா உரை
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.
மணக்குடவர் உரை
எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான் அவன் அதனளவு துன்பமுறுதலிலன்.
குறள் 342 :
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
மு.வரதராசனார் உரை
துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.
மு.கருணாநிதி உரை
ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.
சாலமன் பாப்பையா உரை
பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.
மணக்குடவர் உரை
தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின், தன்னுடைமையெல்லாவற்றையுந் துறக்க; துறந்தபின் இவ்விடத்தே யியலும்பகுதியின பல. இஃது இம்மைப் பயன் கூறிற்று.
குறள் 343 :
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
மு.வரதராசனார் உரை
ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
மு.கருணாநிதி உரை
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
சாலமன் பாப்பையா உரை
ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.
மணக்குடவர் உரை
துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்: அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும்.
குறள் 344 :
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
மு.வரதராசனார் உரை
தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.
மு.கருணாநிதி உரை
ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை
உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.
மணக்குடவர் உரை
யாதொரு பொருளும் இலதாதல் தவத்திற்கியல்பாகும்: பொருளுடைமை மீண்டும் பிறத்தற்குக் காரணமான மயக்கத்தைத் தரும்.
குறள் 345 :
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
மு.வரதராசனார் உரை
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.
மு.கருணாநிதி உரை
பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?.
சாலமன் பாப்பையா உரை
இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.
மணக்குடவர் உரை
பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?.
குறள் 346 :
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.
மு.வரதராசனார் உரை
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
மு.கருணாநிதி உரை
யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.
சாலமன் பாப்பையா உரை
உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.
மணக்குடவர் உரை
யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.
குறள் 347 :
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
மு.வரதராசனார் உரை
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
மு.கருணாநிதி உரை
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.
சாலமன் பாப்பையா உரை
ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.
மணக்குடவர் உரை
பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும். இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.
குறள் 348 :
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
மு.வரதராசனார் உரை
முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.
மு.கருணாநிதி உரை
அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.
சாலமன் பாப்பையா உரை
ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.
மணக்குடவர் உரை
பற்றறத் துறந்தார் முத்தியைத் தலைப்பட்டார்: அல்லாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையிலே யகப்பட்டார். இது மறுமைப் பயன் கூறிற்று.
குறள் 349 :
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
மு.வரதராசனார் உரை
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
மு.கருணாநிதி உரை
பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை
ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.
மணக்குடவர் உரை
ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும். இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.
குறள் 350 :
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
மு.வரதராசனார் உரை
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
மு.கருணாநிதி உரை
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை
ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.
மணக்குடவர் உரை
பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.
திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்