திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி

குறள் 391 :

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

மு.வரதராசனார் உரை

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

மு.கருணாநிதி உரை

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

மணக்குடவர் உரை

கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.

குறள் 392 :

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

மு.வரதராசனார் உரை

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

மு.கருணாநிதி உரை

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

மணக்குடவர் உரை

எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.

குறள் 393 :

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

மு.வரதராசனார் உரை

கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

மு.கருணாநிதி உரை

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

சாலமன் பாப்பையா உரை

ற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

மணக்குடவர் உரை

கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர். அறிவு கல்வியின் கண்ணதாகலான் அக்கல்வியில்லாதார் கண் புண்ணாயிற்று.

குறள் 394 :

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

மு.வரதராசனார் உரை

மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

மு.கருணாநிதி உரை

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

சாலமன் பாப்பையா உரை

மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.

மணக்குடவர் உரை

மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.

குறள் 395 :

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

மு.வரதராசனார் உரை

செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

மு.கருணாநிதி உரை

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.

மணக்குடவர் உரை

பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்.
இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.

குறள் 396 :

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

மு.வரதராசனார் உரை

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

மு.கருணாநிதி உரை

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை

மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

மணக்குடவர் உரை

அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண்டாம்: அதுபோல மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம். இஃது அறிவுண்டாமென்றது.

குறள் 397 :

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

மு.வரதராசனார் உரை

கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

மு.கருணாநிதி உரை

கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?.

சாலமன் பாப்பையா உரை

கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?.

மணக்குடவர் உரை

யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம். ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி?. இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது.

குறள் 398 :

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

மு.வரதராசனார் உரை

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

மு.கருணாநிதி உரை

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் – எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

மணக்குடவர் உரை

ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.

குறள் 399 :

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

மு.வரதராசனார் உரை

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

மு.கருணாநிதி உரை

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.

மணக்குடவர் உரை

தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால் அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர்.
இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின் அது கல்வியானே வருமென்றது.

குறள் 400 :

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

மு.வரதராசனார் உரை

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

மு.கருணாநிதி உரை

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

மணக்குடவர் உரை

ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல. இது கல்வி அழியாத செல்வமென்றது.

திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *