/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

குறள் 411 :

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

மு.வரதராசனார் உரை

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

மு.கருணாநிதி உரை

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

சாலமன் பாப்பையா உரை

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

மணக்குடவர் உரை

ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான்.

குறள் 412 :

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

மு.வரதராசனார் உரை

செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

மு.கருணாநிதி உரை

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை

செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

மணக்குடவர் உரை

செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும். பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார். இஃது எல்லாக்காலமும் கேட்க வேண்டு மென்றது.

குறள் 413 :

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

மு.வரதராசனார் உரை

கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

மு.கருணாநிதி உரை

குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.

சாலமன் பாப்பையா உரை

செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

மணக்குடவர் உரை

செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.

குறள் 414 :

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

மு.வரதராசனார் உரை

நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.

மு.கருணாநிதி உரை

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை

கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.

மணக்குடவர் உரை

கற்கமாட்டானாயினுங் கேட்க: அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக்குத் தாங்கலாவதொரு துணையாம். இது கேள்வி வேண்டுமென்றது.

குறள் 415 :

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

மு.வரதராசனார் உரை

கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

மு.கருணாநிதி உரை

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

சாலமன் பாப்பையா உரை

கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

மணக்குடவர் உரை

வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.

குறள் 416 :

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

மு.வரதராசனார் உரை

எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

மு.கருணாநிதி உரை

நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

மணக்குடவர் உரை

எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும். இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.

குறள் 417 :

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

மு.வரதராசனார் உரை

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

மு.கருணாநிதி உரை

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை

நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.

மணக்குடவர் உரை

ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின சொல்லார், ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார். இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.

குறள் 418 :

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

மு.வரதராசனார் உரை

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

மு.கருணாநிதி உரை

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

சாலமன் பாப்பையா உரை

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

மணக்குடவர் உரை

ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி. இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.

குறள் 419 :

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

மு.வரதராசனார் உரை

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

மு.கருணாநிதி உரை

தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

சாலமன் பாப்பையா உரை

நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

மணக்குடவர் உரை

நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை. இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.

குறள் 420 :

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

மு.வரதராசனார் உரை

செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

மு.கருணாநிதி உரை

செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.

சாலமன் பாப்பையா உரை

செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?.

மணக்குடவர் உரை

செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு. இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.

திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *