திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்துசெயல்வகை

குறள் 461 :

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

மு.வரதராசனார் உரை

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

மு.கருணாநிதி உரை

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

மணக்குடவர் உரை

வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும்.

குறள் 462 :

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

மு.வரதராசனார் உரை

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

மு.கருணாநிதி உரை

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை

தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

மணக்குடவர் உரை

அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டிக்கொள்ளப்பட்ட மந்திரிகளாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து அதனைச் செய்யுமாறு எண்ணிச் செய்யவல்ல அரசர்க்குப் பெறுதற்கு அரிதா யிருப்பதொரு பொருள் யாதொன்று மில்லை.

குறள் 463 :

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

மு.வரதராசனார் உரை

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

மு.கருணாநிதி உரை

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை

வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

மணக்குடவர் உரை

தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார்.
இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது.

குறள் 464 :

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

மு.வரதராசனார் உரை

கல்லாதவனுடைய இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

மு.கருணாநிதி உரை

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை

தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

மணக்குடவர் உரை

ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்.

குறள் 465 :

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

மு.வரதராசனார் உரை

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

மு.கருணாநிதி உரை

முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை

முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

மணக்குடவர் உரை

மேற்சொன்னவகைகளில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழுதல் பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி.
இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது.

குறள் 466 :

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

மு.வரதராசனார் உரை

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

மு.கருணாநிதி உரை

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை

செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

மணக்குடவர் உரை

செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்; செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும்.
இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று.

குறள் 467 :

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

மு.வரதராசனார் உரை

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

மு.கருணாநிதி உரை

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

மணக்குடவர் உரை

ஒருவினை செய்யத் துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிக: துணிந்தபின் எண்ணுவோமென்றல் தப்பாமாதலான்.

குறள் 468 :

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

மு.வரதராசனார் உரை

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

மு.கருணாநிதி உரை

எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

மணக்குடவர் உரை

மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் புரைபடும். இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.

குறள் 469 :

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

மு.வரதராசனார் உரை

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

மு.கருணாநிதி உரை

ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.

சாலமன் பாப்பையா உரை

அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

மணக்குடவர் உரை

நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து. இதுவுமோரெண்ணம்.

குறள் 470 :

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

மு.வரதராசனார் உரை

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

மு.கருணாநிதி உரை

தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

மணக்குடவர் உரை

முடியுமாயினும் பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான். இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது.

திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *