திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்

குறள் 481 :

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

மு.வரதராசனார் உரை

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

மு.கருணாநிதி உரை

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

மணக்குடவர் உரை

இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும். ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும் இது காலமறிதல் வேண்டும் என்றது.

குறள் 482 :

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

மு.வரதராசனார் உரை

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

மு.கருணாநிதி உரை

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை

காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

மணக்குடவர் உரை

காலத்தோடு பொருந்த ஒழுகுதல் செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம். இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்.

குறள் 483 :

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.

மு.வரதராசனார் உரை

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

மு.கருணாநிதி உரை

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

சாலமன் பாப்பையா உரை

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.

மணக்குடவர் உரை

அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.

குறள் 484 :

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

மு.வரதராசனார் உரை

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

மு.கருணாநிதி உரை

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

மணக்குடவர் உரை

உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின். இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.

குறள் 485 :

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

மு.வரதராசனார் உரை

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

மு.கருணாநிதி உரை

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

மணக்குடவர் உரை

செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்.

குறள் 486 :

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

மு.வரதராசனார் உரை

ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

மு.கருணாநிதி உரை

கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

மணக்குடவர் உரை

மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.

குறள் 487 :

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

மு.வரதராசனார் உரை

அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

மு.கருணாநிதி உரை

பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.

சாலமன் பாப்பையா உரை

தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.

மணக்குடவர் உரை

கதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார்: தமக்குச் செய்யலாங் காலம் பார்த்து மனம் வேர்ப்பர் ஒள்ளியர். வேர்ப்பு பொறாமையால் வருவதொன்று. இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது.

குறள் 488 :

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

மு.வரதராசனார் உரை

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

மு.கருணாநிதி உரை

பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

மணக்குடவர் உரை

பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.

குறள் 489 :

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

மு.வரதராசனார் உரை

கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

மு.கருணாநிதி உரை

கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

மணக்குடவர் உரை

பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க. இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது.

குறள் 490 :

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

மு.வரதராசனார் உரை

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

மு.கருணாநிதி உரை

காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

மணக்குடவர் உரை

காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க, வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் விரைந்து செய்க. இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்ய வேண்டுமென்பதூஉம் கூறிற்று.

திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *