திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்

குறள் 491 :

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

மு.வரதராசனார் உரை

முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

மு.கருணாநிதி உரை

ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.

மணக்குடவர் உரை

முடியுமிடங் கண்டாலல்லது யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக. இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று.

குறள் 492 :

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

மு.வரதராசனார் உரை

மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

மு.கருணாநிதி உரை

வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

சாலமன் பாப்பையா உரை

பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.

மணக்குடவர் உரை

பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும். இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.

குறள் 493 :

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

மு.வரதராசனார் உரை

தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்.

மு.கருணாநிதி உரை

தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

சாலமன் பாப்பையா உரை

பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

மணக்குடவர் உரை

வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.

குறள் 494 :

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

மு.வரதராசனார் உரை

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

மு.கருணாநிதி உரை

ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை

ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.

மணக்குடவர் உரை

தம்மைக் கெடுத்தற் கெண்ணினவர் தங்களெண்ணம் இழப்பர்; வினைசெய்யும் இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின். இஃது இடமறிந்து செய்வோர் அமைதியும் வேண்டுமென்றது.

குறள் 495 :

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

மு.வரதராசனார் உரை
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

மு.கருணாநிதி உரை

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.

சாலமன் பாப்பையா உரை

முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.

மணக்குடவர் உரை

நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்; அஃது அந்நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்.
இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறியவேண்டு மென்பது கூறின.

குறள் 496 :

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

மு.வரதராசனார் உரை

வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.

மு.கருணாநிதி உரை

ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.

மணக்குடவர் உரை

கால் வலிய நெடுந்தேர் கடலின்கண் ஓடாது: கடலின் கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடாது. இஃது இடத்திற்காங் கருவி பண்ணவேண்டுமென்றது.

குறள் 497 :

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

மு.வரதராசனார் உரை

(செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.

மு.கருணாநிதி உரை

ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.

சாலமன் பாப்பையா உரை

செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.

மணக்குடவர் உரை

தப்பாமலெண்ணி இடத்தோடு பொருந்த வினை செய்ய வல்லவராயின், அஞ்சாமையே வேண்டுவ தல்லாமல் வேறு துணையாவாரைத் தேட வேண்டுவதில்லை. இஃது இடனறிந்தால் துணையின்றியும் வெல்வரென்றது.

குறள் 498 :

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

மு.வரதராசனார் உரை

சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

மு.கருணாநிதி உரை

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

சாலமன் பாப்பையா உரை

பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

மணக்குடவர் உரை

சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும். இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.

குறள் 499 :

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

மு.வரதராசனார் உரை

அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

மு.கருணாநிதி உரை

பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

சாலமன் பாப்பையா உரை

மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.

மணக்குடவர் உரை

அரசன் பதியும் பெருமையும் இலராயினும் மாந்தர் உறைநிலத்தின்கண் பொருந்துத லரிது. இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால் அறிந்து செல்ல வேண்டுமென்றது.

குறள் 500 :

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

மு.வரதராசனார் உரை

வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

மு.கருணாநிதி உரை

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

சாலமன் பாப்பையா உரை

பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.

மணக்குடவர் உரை

கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட முகத்தினையுடைய களிற்றைக் கால் விழப்பட்ட களரின்கண் நரி கொல்லவற்றாம். இது மேலதற்குக் காரணங் கூறிற்று.

திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்துதெளிதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *