திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்துதெளிதல்

குறள் 501 :

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

மு.வரதராசனார் உரை

அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

மு.கருணாநிதி உரை

அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

மணக்குடவர் உரை

அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான். முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார்.

குறள் 502 :

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

மு.வரதராசனார் உரை

நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

மு.கருணாநிதி உரை

குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

மணக்குடவர் உரை

உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு.
இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு.

குறள் 503 :

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

மு.வரதராசனார் உரை

அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

மு.கருணாநிதி உரை

அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.

சாலமன் பாப்பையா உரை

அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

மணக்குடவர் உரை

கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.

குறள் 504 :

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

மு.வரதராசனார் உரை

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,
மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

மு.கருணாநிதி உரை

ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

மணக்குடவர் உரை

ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்க.

குறள் 505 :

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

மு.வரதராசனார் உரை

(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

மு.கருணாநிதி உரை

ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சாலமன் பாப்பையா உரை

உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.

மணக்குடவர் உரை

ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம். இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்.

குறள் 506 :

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

மு.வரதராசனார் உரை

சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

மு.கருணாநிதி உரை

நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.

மணக்குடவர் உரை

ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.

குறள் 507 :

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.

மு.வரதராசனார் உரை

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

மு.கருணாநிதி உரை

அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.

சாலமன் பாப்பையா உரை

அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

மணக்குடவர் உரை

அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லாதாரைத் தேறுதல் எல்லா அறியாமையும் தரும். அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர் மதம். இஃது இவ்வளவினால் தேறலாகாதென்றது.

குறள் 508 :

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

மு.வரதராசனார் உரை

மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

மு.கருணாநிதி உரை

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

சாலமன் பாப்பையா உரை

நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

மணக்குடவர் உரை

பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும். இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.

குறள் 509 :

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

மு.வரதராசனார் உரை

யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம்
தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

மு.கருணாநிதி உரை

நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை

எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

மணக்குடவர் உரை

யாவரையும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக. இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொருளினும் தெளிக வென்றது.

குறள் 510 :

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

மு.வரதராசனார் உரை

ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.

மு.கருணாநிதி உரை

ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

மணக்குடவர் உரை

ஒருவனை ஆராயாது தெளிதலும் தெளிந்து கொள்ளப்பட்டவன் மாட்டுத் தான் ஐயப்படுதலுமாகிய இவ்விரண்டும் நீங்காத துன்பத்தைத் தரும்.

திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்துவினையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *