திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

குறள் 551 :

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

மு.வரதராசனார் உரை

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

மு.கருணாநிதி உரை

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.

சாலமன் பாப்பையா உரை

குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

மணக்குடவர் உரை

கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன்.

குறள் 552 :

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

மு.வரதராசனார் உரை

ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

மு.கருணாநிதி உரை

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

மணக்குடவர் உரை

தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல். கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.

குறள் 553 :

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.

மு.வரதராசனார் உரை

நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

மு.கருணாநிதி உரை

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை

நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

மணக்குடவர் உரை

குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும். இது நாடு கெடுமென்றது.

குறள் 554 :

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

மு.வரதராசனார் உரை

(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

மு.கருணாநிதி உரை

நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை

மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

மணக்குடவர் உரை

பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன்.
இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.

குறள் 555 :

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

மு.வரதராசனார் உரை

(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.

மு.கருணாநிதி உரை

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

சாலமன் பாப்பையா உரை

தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

மணக்குடவர் உரை

நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம். இஃது அவ்வரசன் கெடுமென்றது.

குறள் 556 :

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

மு.வரதராசனார் உரை

அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

மு.கருணாநிதி உரை

நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

சாலமன் பாப்பையா உரை

ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

மணக்குடவர் உரை

அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை; அஃதில்லை யாயின் அரசர்க்கு ஒளி நிலையாதாம். முறை செய்யாமையால் அவன் நிலைபெறுதல் அருமையெனக் குற்றங் கூறுவார் முற்படப் புகழில்லையாம் என்றார்.

குறள் 557 :

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

மு.வரதராசனார் உரை

மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

மு.கருணாநிதி உரை

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

மணக்குடவர் உரை

உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு. இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.

குறள் 558 :

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

மு.வரதராசனார் உரை

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

மு.கருணாநிதி உரை

வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.

சாலமன் பாப்பையா உரை

தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

மணக்குடவர் உரை

நல்குரவினும் செல்வம் துன்பமாகும்: முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின். இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.

குறள் 559 :

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

மு.வரதராசனார் உரை

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

மு.கருணாநிதி உரை

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.

சாலமன் பாப்பையா உரை

ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

மணக்குடவர் உரை

முறைமைகோட மன்னவன் செய்வனாயின், மழை துளி விடுதலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்.

குறள் 560 :

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

மு.வரதராசனார் உரை

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

மு.கருணாநிதி உரை

ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை

காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

மணக்குடவர் உரை

பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.

திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்தசெய்யாமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *