திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்

குறள் 581 :

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

மு.வரதராசனார் உரை

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

மு.கருணாநிதி உரை

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

மணக்குடவர் உரை

ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக.
அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.

குறள் 582 :

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

மு.வரதராசனார் உரை

எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

மு.கருணாநிதி உரை

நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை

பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

மணக்குடவர் உரை

பகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்திற்கும், தம் சுற்றத்திற்கும், அறம் பொருள் இன்பங்களைப் பற்றி நிகழ்பவை எல்லாவற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்து அறிதல் வேந்தனது தொழில் என்றவாறு.

குறள் 583 :

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.

மு.வரதராசனார் உரை

ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.

மு.கருணாநிதி உரை

நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.

சாலமன் பாப்பையா உரை

எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

மணக்குடவர் உரை

ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை. இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.

குறள் 584 :

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.

மு.வரதராசனார் உரை

தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

மு.கருணாநிதி உரை

ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.

சாலமன் பாப்பையா உரை

அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.

மணக்குடவர் உரை

தமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும் தமக்குச் சுற்றமாயிருப்பாரும் தம்மை வேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன். இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின.

குறள் 585 :

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

மு.வரதராசனார் உரை

ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.

மு.கருணாநிதி உரை

சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.

மணக்குடவர் உரை

வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.

குறள் 586 :

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.

மு.வரதராசனார் உரை

துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.

மு.கருணாநிதி உரை

ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.

சாலமன் பாப்பையா உரை

செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.

மணக்குடவர் உரை

தவஞ்செய்வார் வேடத்தராகி, நாட்டெல்லையைக் கடந்துபோய், அங்குள்ள செய்தியை ஆராய்ந்து அவ்விடத்து அகப்படாமல் அவ்விடத்திலுள்ளார் துன்பமாயினும் இன்பமாயினும் செய்து கேட்டாலும், தன் உள்ளக் கருத்தைச் சோரவிடாதவன் ஒற்றனாவன் என்றவாறு.

குறள் 587 :

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.

மு.வரதராசனார் உரை

மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

மு.கருணாநிதி உரை

மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.

சாலமன் பாப்பையா உரை

ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.

மணக்குடவர் உரை

பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான்.
இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின.

குறள் 588 :

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

மு.வரதராசனார் உரை

ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

மு.கருணாநிதி உரை

ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.

மணக்குடவர் உரை

ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க.

குறள் 589 :

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

மு.வரதராசனார் உரை

ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.

மு.கருணாநிதி உரை

ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.

சாலமன் பாப்பையா உரை

ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.

மணக்குடவர் உரை

ஒற்றரை விடுங்கால் ஒருவரையொருவர் அறியாமல் விடுக: மூவர் சொல் உடன்கூடின் அது தெளியப்படுமாதலால். இவை இரண்டும் ஒற்றரை யாளுந்திறங் கூறின.

குறள் 590 :

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.

மு.வரதராசனார் உரை

ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

மு.கருணாநிதி உரை

ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை

மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.

மணக்குடவர் உரை

ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்க: பிறரறியச் செய்வனாயின் அவர் ஒற்றிவந்த பொருளைப் புறத்துவிட்டானாம். இஃது ஒற்றர்க்குச் சிறப்புச் செய்யுங்கால் பிறரறியாமற் செய்ய வேண்டுமென்றது.

திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கமுடைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *