திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினையுடைமை

குறள் 611 :

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

மு.வரதராசனார் உரை

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

மு.கருணாநிதி உரை

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை

நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

மணக்குடவர் உரை

ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால். இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.

குறள் 612 :

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

மு.வரதராசனார் உரை

தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

மு.கருணாநிதி உரை

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

மணக்குடவர் உரை

வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று. இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.

குறள் 613 :

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.

மு.வரதராசனார் உரை

பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

மு.கருணாநிதி உரை

பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.

சாலமன் பாப்பையா உரை

முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

மணக்குடவர் உரை

முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது: பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம். இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.

குறள் 614 :

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

மு.வரதராசனார் உரை

முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

மு.கருணாநிதி உரை

ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை

முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

மணக்குடவர் உரை

முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டாலஞ்சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும். இஃது அறம் செய்யமாட்டானென்றது.

குறள் 615 :

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

மு.வரதராசனார் உரை

தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

மு.கருணாநிதி உரை

தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

சாலமன் பாப்பையா உரை

இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.

மணக்குடவர் உரை

தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன் தன் கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவதொரு தூணாம். ஆதலால் வருத்தம் பாராது முயலவேண்டு மென்பது.

குறள் 616 :

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

மு.வரதராசனார் உரை

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

மு.கருணாநிதி உரை

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை

முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

மணக்குடவர் உரை

முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும். இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.

குறள் 617 :

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

மு.வரதராசனார் உரை

ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

மு.கருணாநிதி உரை

திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

சாலமன் பாப்பையா உரை

சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

மணக்குடவர் உரை

வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர். இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.

குறள் 618 :

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

மு.வரதராசனார் உரை

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

மு.கருணாநிதி உரை

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

சாலமன் பாப்பையா உரை

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

மணக்குடவர் உரை

யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது. அறிவு- காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.

குறள் 619 :

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

மு.வரதராசனார் உரை

ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

மு.கருணாநிதி உரை

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை

விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

மணக்குடவர் உரை

புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.

குறள் 620 :

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

மு.வரதராசனார் உரை

சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

மு.கருணாநிதி உரை

ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

மணக்குடவர் உரை

ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர், பயன்படாமல் விலக்குகின்ற தீய வினையையும் முதுகு புறங்காண்பர். இஃது ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது.

திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கணழியாமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *