திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்

குறள் 661 :

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

மு.வரதராசனார் உரை

ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.

மு.கருணாநிதி உரை

மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.

மணக்குடவர் உரை

வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது கருவியும் உபாயமும்.

குறள் 662 :

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

மு.வரதராசனார் உரை

இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

மு.கருணாநிதி உரை

இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை

பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

மணக்குடவர் உரை

வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார் நீதி நெறியை ஆராய்ந்தவர்.

குறள் 663 :

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.

மு.வரதராசனார் உரை

செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

மு.கருணாநிதி உரை

செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

மணக்குடவர் உரை

ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே சென்று மீளல் செய்வது ஆண்மையாவது; இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும். சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது.

குறள் 664 :

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

மு.வரதராசனார் உரை

இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.

மு.கருணாநிதி உரை

சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

சாலமன் பாப்பையா உரை

நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

மணக்குடவர் உரை

ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம். அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்.

குறள் 665 :

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

மு.வரதராசனார் உரை

செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

மு.கருணாநிதி உரை

செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை

எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.

மணக்குடவர் உரை

மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத் திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும். இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.

குறள் 666 :

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

மு.வரதராசனார் உரை

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

மு.கருணாநிதி உரை

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை

ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

மணக்குடவர் உரை

தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்: அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின். இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது..

குறள் 667 :

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

மு.வரதராசனார் உரை

உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.

மு.கருணாநிதி உரை

உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.

மணக்குடவர் உரை

யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்தல் வேண்டும். உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து: ஆதலால்.

குறள் 668 :

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.

மு.வரதராசனார் உரை

மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

மு.கருணாநிதி உரை

மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.

மணக்குடவர் உரை

கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து செய்யவேண்டு மென்றது.

குறள் 669 :

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

மு.வரதராசனார் உரை

(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

மு.கருணாநிதி உரை

இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.

மணக்குடவர் உரை

முற்பாடு துன்பம் உறவரினும் துணிந்து செய்க, பிற்பாடு இன்பம் பயக்கும் வினையை.

குறள் 670 :

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.

மு.வரதராசனார் உரை

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.

மு.கருணாநிதி உரை

எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.

சாலமன் பாப்பையா உரை

எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.

மணக்குடவர் உரை

கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார். பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.

 திருக்குறள் அதிகாரம் 68 – வினைசெயல்வகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *