திருப்பரங்குன்றம் திருப்புகழ்..!

திருப்புகழ் 7 – அருக்கு மங்கையர் (திருப்பரங்குன்றம்)

 அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் …… இருதோளுற்

றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென …… மிகவாய்விட்

டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை யின்கனி நிகரென இலகிய …… முலைமேல்வீழ்ந்

துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது…… தவிர்வேனோ

இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக …… எழில்வேளென்

றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை …… புனைவோனே

செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய …… குருநாதர்

திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.

 

திருப்புகழ் 8 – உனைத் தினம் (திருப்பரங்குன்றம்) 

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை

உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை

உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ……. தருள்மாறா

 

உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்

விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்

உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ……. மலைபோலே

 

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு

கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்

கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ……. பொருபோதே

 

கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு

கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்

கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ……. வருவாயே

 

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள

விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண

விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ……. புரிவேலா

 

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய

கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை

விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ……. உடையோனே

 

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு

புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு

சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ……. மகிழ்வோனே

 

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை

தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்

திருப் பரங்கிரி தனிலுறை சரவண  ……. பெருமாளே.

 

திருப்புகழ் 9 – கருவடைந்து (திருப்பரங்குன்றம்)

கருவடைந்து பத்துற்ற திங்கள்

வயிறிருந்து முற்றிப்ப யின்று

கடையில்வந்து தித்துக்கு ழந்தை ……. வடிவாகிக்

 

கழுவியங்கெ டுத்துச்சு ரந்த

முலையருந்து விக்கக்கி டந்து

கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ……. நடமாடி

 

அரைவடங்கள் கட்டிச்ச தங்கை

இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை

அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ……. வயதேறி

 

அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து

பிணியுழன்று சுற்றித்தி ரிந்த

தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ……. பெறுவேனோ

 

இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி

னரசரென்றும் ஒப்பற்ற உந்தி

யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ……. நெடுநீலன்

 

எரியதென்றும் ருத்ரற்சி றந்த

அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்

எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ……. புனமேவ

 

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற

அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ……. மருகோனே

 

அயனையும்பு டைத்துச்சி னந்து

உலகமும்ப டைத்துப்ப ரிந்து

அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ……. பெருமாளே.

 

திருப்புகழ் 10 கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்)

கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு

நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு

கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு …… நகையாலே

 

களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ

மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்

கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு …… கொடுபோகி

 

நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற

அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர

நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு …… மிடறூடே

 

நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென

இசைத்து நன்கொடு மனமது மறுகிட

நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற …… அருள்வாயே

 

நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென

உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென

நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென …… வரைபோலும்

 

நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு

சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு

நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர …… அடுதீரா

 

திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு

புழைக்கை தண்கட கயமுக மிகவுள

சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் …… இளையோனே

 

சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய

பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு

திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.

 

திருப்புகழ் 11 கனகந்திரள்கின்ற (திருப்பரங்குன்றம்)

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி

தனில்வந்துத கன்தகன் என்றிடு

கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு – கதியோனே

 

கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்

கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு

கரியின்றுணை என்றுபி றந்திடு – முருகோனே

 

பனகந்துயில் கின்றதி றம்புனை

கடல்முன்புக டைந்தப ரம்பரர்

படரும்புயல் என்றவர் அன்புகொள் – மருகோனே

 

பலதுன்பம்உழன்றுக லங்கிய

சிறியன்புலை யன்கொலை யன்புரி

பவமின்றுக ழிந்திட வந்தருள் – புரிவாயே

 

அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி

புரமுந்திரி வென்றிட இன்புடன்

அழலுந்தந குந்திறல் கொண்டவர் – புதல்வோனே

 

அடல்வந்துமு ழங்கியி டும்பறை

டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென

அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட – வருசூரர்

 

மனமுந்தழல் சென்றிட அன்றவர்

உடலுங்குட லுங்கிழி கொண்டிட

மயில்வென்றனில் வந்தரு ளுங்கன – பெரியோனே

 

மதியுங்கதி ருந்தட வும்படி

உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய

வளமொன்றுப ரங்கிரி வந்தருள் – பெருமாளே.

 

திருப்புகழ் 12 காதடருங்கயல் (திருப்பரங்குன்றம்)

காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி

வாளிம யங்கம னம்பயந் தந்திருள்

கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு – தொருகோடி

 

காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை

யாழியு டன்கட கந்துலங் கும்படி

காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு – மயலாலே

 

வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித

மாகந டந்தவர் பின்திரிந் துந்தன

மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம – துழலாதே

 

வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி

மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு

வாழநி தம்புனை யும்பதந் தந்துன – தருள்தாராய்

 

போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர

மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ

போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட – மொழிவோனே

 

பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி

ரீவம டந்தைபு ரந்தரன் தந்தருள்

பூவைக ருங்குற மின்கலந் தங்குப – னிருதோளா

 

தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி

டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல

சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு – திறலோனே

 

சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்

சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி

தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை – பெருமாளே.

 

திருப்புகழ் 13 சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்)

சந்ததம் பந்தத் – தொடராலே

சஞ்சலந் துஞ்சித் – திரியாதே

 

கந்தனென் றென்றுற் – றுனைநாளும்

கண்டுகொண் டன்புற் – றிடுவேனோ

 

தந்தியின் கொம்பைப் – புணர்வோனே

சங்கரன் பங்கிற் – சிவைபாலா

 

செந்திலங் கண்டிக் – கதிர்வேலா

தென்பரங் குன்றிற் – பெருமாளே.

 

திருப்புகழ் 14 சருவும்படி (திருப்பரங்குன்றம்)

சருவும்படி வந்தனன் இங்கித

மதனின்றிட அம்புலி யுஞ்சுடு

தழல்கொண்டிட மங்கையர் கண்களின் – வசமாகிச்

 

சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய

பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய

தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட – திறமாவே

 

இரவும்பகல் அந்தியு நின்றிடு

குயில்வந்திசை தெந்தன என்றிட

இருகண்கள்து யின்றிட லின்றியும் – அயர்வாகி

 

இவணெஞ்சுப தன்பதன் என்றிட

மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்

இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் – அடைவேனோ

 

திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்

மனையின்தயிர் உண்டவன் எண்டிசை

திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் – பயில்வோர்பின்

 

திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை

பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்

செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் – மருகோனே

 

மருவுங்கடல் துந்திமி யுங்குட

முழவங்கள்கு மின்குமி னென்றிட

வளமொன்றிய செந்திலில் வந்தருள் – முருகோனே

 

மதியுங்கதி ரும்புய லுந்தின

மறுகும்படி அண்டம்இ லங்கிட

வளர்கின்றப ரங்கிரி வந்தருள் – பெருமாளே.

 

திருப்புகழ் 15 தடக்கைப் பங்கயம் (திருப்பரங்குன்றம்)

தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்

டமிழ்க்குத் தஞ்சமென் – றுலகோரைத்

 

தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்

தளர்ச்சிப் பம்பரந் – தனையூசற்

 

கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்

கலத்தைப் பஞ்சஇந் – த்ரியவாழ்வைக்

 

கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்

கழற்குத் தொண்டுகொண் – டருள்வாயே

 

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்

புரக்கக் கஞ்சைமன் – பணியாகப்

 

பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்

பரத்தைக் கொண்டிடுந் – தனிவேலா

 

குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்

குலத்திற் கங்கைதன் – சிறியோனே

 

குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்

குவித்துக் கும்பிடும் – பெருமாளே.

 

திருப்புகழ் 16 பதித்த செஞ்சந்த (திருப்பரங்குன்றம்)

பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்

பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்

பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் – தனபாரம்

 

படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்

செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்

பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் – றிளைஞோர்கள்

 

துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்

புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்

துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் – கொடியார்பால்

 

துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்

புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்

துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் – றருள்வாயே

 

குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்

கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்

குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் – கதிர்வேலா

 

குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்

தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங்

குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் – குகுகூகூ

 

திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்

பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்

திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் – கொலைவேடர்

 

தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்

டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்

திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் – பெருமாளே.

 

திருப்புகழ் 17 பொருப்புறுங் (திருப்பரங்குன்றம்)

பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய

பிணக்கிடுஞ் சண்டிகள் – வஞ்சமாதர்

 

புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்

முருக்குவண் செந்துவர் – தந்துபோகம்

 

அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்

அறச்சிவந் தங்கையில் – அன்புமேவும்

 

அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்

அருட்பதம் பங்கயம் – அன்புறாதோ

 

மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்

விதித்தெணுங் கும்பிடு – கந்தவேளே

 

மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு

மிசைக்கிடுஞ் செந்தமிழ் – அங்கவாயா

 

பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு

திறற்செழுஞ் சந்தகில் – துன்றிநீடு

 

தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை

திருப்பரங் குன்றுறை – தம்பிரானே.

 

திருப்புகழ் 18 மன்றலங் கொந்துமிசை (திருப்பரங்குன்றம்)

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென

வண்டினங் கண்டுதொடர் – குழல்மாதர்

 

மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக

வம்பிடுங் கும்பகன – தனமார்பில்

 

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய

உந்தியென் கின்றமடு – விழுவேனை

 

உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்

ஒண்கடம் பும்புனையும் – அடிசேராய்

 

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்

பண்டையென் பங்கமணி – பவர்சேயே

 

பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர

பண்டிதன் தம்பியெனும் – வயலூரா

 

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்

செண்பகம் பைம்பொன்மலர் – செறிசோலை

 

திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்

தென்பரங் குன்றிலுறை – பெருமாளே.

 

திருப்புகழ் 19 வடத்தை மிஞ்சிய (திருப்பரங்குன்றம்)

வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை

தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்

மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு – மையினாலே

 

வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல

நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை

வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் – தொடுபோதே

 

விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள

மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்

விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு – தொழில்தானே

 

விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்

மனத்தை நம்பிய சிறியனை வெறியனை

விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ – துளதோதான்

 

குடத்தை வென்றிரு கிரியென எழில்தள

தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு

குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு – வடிவேலா

 

குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்

அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்

குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி – மருகோனே

 

திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட

அயிற்கொ டும்படை விடுசர வணபவ

திறற்கு கன்குரு பரனென வருமொரு – முருகோனே

 

செழித்த தண்டலை தொறுமில கியகுட

வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்

திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய – பெருமாளே.

 

திருப்புகழ் 20 வரைத்தடங் கொங்கை (திருப்பரங்குன்றம்)

வரைத்தடங் கொங்கை யாலும்

வளைப்படுஞ் செங்கை யாலும்

மதர்த்திடுங் கெண்டை யாலும் – அனைவோரும்

 

வடுப்படுந் தொண்டை யாலும்

விரைத்திடுங் கொண்டை யாலும்

மருட்டிடுஞ் சிந்தை மாதர் – வசமாகி

 

எரிப்படும் பஞ்சு போல

மிகக்கெடுந் தொண்ட னேனும்

இனற்படுந் தொந்த வாரி – கரையேற

 

இசைத்திடுஞ் சந்த பேதம்

ஒலித்திடுந் தண்டை சூழும்

இணைப்பதம் புண்ட ரீகம் – அருள்வாயே

 

சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்

இளக்ரவுஞ் சந்த னோடு

துளக்கெழுந் தண்ட கோளம் – அளவாகத்

 

துரத்தியன் றிந்த்ர லோகம்

அழித்தவன் பொன்று மாறு

சுடப்பருஞ் சண்ட வேலை – விடுவோனே

 

செருக்கெழுந் தும்பர் சேனை

துளக்கவென் றண்ட மூடு

தெழித்திடுஞ் சங்க பாணி – மருகோனே

 

தினைப்புனஞ் சென்று லாவு

குறத்தியின் பம்ப ராவு

திருப்பரங் குன்ற மேவு – பெருமாளே.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *