51 சக்தி பீடங்களில் இது காளி பீடம், இந்த ஊர் எல்லையிலே தனிக் கோயில் கொண்டு காவல் புரிகிறாள் திருவாலங்காடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன்.
தலபுராணம்
முற்காலத்தில் இவ்வூர் ஆலமரங்கள் நிறைந்த பகுதி என்பதால் ஆலங்காடு என்ற பெயர்ப் பெற்றது. இங்கே சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ரத்ன சபை அமையப் பெற்றுள்ளது.
இக்காட்டில் சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் சிவபெருமானை நோக்கி தவம் செய்து தங்கள் உடலில் இருந்து விழுகின்ற ஒவ்வொரு துளி இரத்தத்தில் இருந்து தங்களைப்போலவே ஒவ்வொரு உருவமாக உருவாகிக்கொண்டே இருக்குமாறு வரம் பெற்றனர்.
இவர்கள் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் கையிலை நாதனிடம் முறையிட்டனர். சிவபெருமான் பராசக்தியின் திருக்கண் பார்வையில் இருந்து எட்டு திருக்கரங்களுடன் பத்ரகாளியை உருவாக்கி அசுரர்களை அழிக்குமாறு கூறி இங்கு அனுப்பினார்.
பத்ரகாளி அவர்களுடன் போரிட்டாள் அவர்கள் உடலில் இருந்து இரத்தத்தை கீழே விடாமல் கபாலத்தில் பிடித்து குடித்து வந்தாள். அசுரர்கள் அழிந்தனர். அசுர இரத்தம் அருந்தியதால் காளிக்கு அசுர குணம் வந்தது. இதனால் தேவர்களை துன்புரிதினாள். தேவர்கள் மீண்டும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமான் கையிலையிலிருந்து புறப்பட்டு அம்பிகையுடன் ஆலவனம் வந்தடைத்தார். காளி தன் நிலை புரியாமல் இறைவனை போருக்கு அழைத்தாள். பிரம்மர், விஷ்ணு, நாரதர் ஆகியோர் இருவரையும் சமாதானம் செய்து நாட்டியப் போட்டி ஏற்பாடு செய்தனர். முஞ்சிகேச (சுனந்த) முனிவர், கார்கோடகர் தலைமையில் நாட்டியம் நடந்தது, நடராஜப்பெருமாள் 17 வகையான நாட்டியங்களை செய்தார். பத்ரகாளியும் அந்நாட்டியங்களை சிறப்பாக செய்தாள்.
ஊர்த்துவ தாண்டவம்
தந்திரத்தால் வெல்ல எண்ணிய பெருமாள் நாட்டியத்தின் போது வலது காதினில் இருந்த குண்டலத்தை கீழே தவறவிட்டு வலது பாதம் ஊன்றி இடது பாதத்தால் அக்குண்டலத்தை எடுத்து உயரத்தூக்கி கரத்தினில் வாங்கி திருச்செவியில் அணிந்துகொண்டார். எனவே இவ்வாலயத்தில் இரத்தினசபாபதிஸ்வரர்க்கு இடது பாதம் உயரத்தூக்கியபடி இருக்கும். இதுவே ‘ஊர்த்துவ தாண்டவம்’ எனப் போற்றப்படுகிறது.
நாட்டியத்தை கண்டு அம்பிகை வியந்து நின்றார். இப்படிக் காலை அவ்வளவு தூரம் உயர்த்தி ஆட முடியாத தன் இயலாமையை எண்ணி நாணத்தால் குனிகிறாள் காளி.
அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,”என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும், மேலும் அம்பிகையின் சக்திபீடங்களில் இது காளிபீடமாக பிரகாசிக்கட்டும் என்றும் வரமளித்தார்.
சக்தி பீடத்தில் காளி பீடம்
இக்கோவில் சிறியது என்றாலும் நிறைய சிற்ப வேலைபாடுகளுடன் அழகுற்று அமைந்துள்ளது. பரமனுக்கே சக்தி தரும் பராசக்தியாக வீற்றிருக்கிறாள் பத்ர காளி.
கருவறையில் அம்பிகை எட்டு திருக்கரங்களுடன் நடன கோலத்தில் காட்சி தருகிறாள்.
நற்கதிக்கு வழிகாட்டும் பத்ரகாளி
நம் வாழ்வில் ஏற்படும் துன்பம், துயரம் அனைத்தையும் அழித்து நற்கதி அடைய சிறந்த வழியை காட்டும் திருவாலங்காடு பத்ர காளி.
திருவாலங்காட்டு இரத்தின சபை காண செல்பவர்கள் தவறாமல் அன்னை திருவாலங்காட்டு பத்ரகாளியை தரிசித்த பிறகே திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயிலுக்கு சென்று அவரை வணங்கினால் தான் முழு பலன் கிடைக்கும்.
வாழ்வில் நல் வழி அறியாமல் தடுமாறுபவர்க்கு நல் வழிகாட்டி வீடுபேறு பெற செய்யும் ஞானத்தை வழங்குகிறாள் பத்ரகாளி அம்மன்.
தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள “கமலத்தேர்”தனி சிறப்பு.
செல்லும் வழி
சென்னை – அரக்கோணம் ரயில் பாதையிலுள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் வடாரண்யேசுவரர் கோயில் உள்ளது.