
தமிழ்நாட்டில் உள்ள நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது திங்களூர் கைலாசநாதர் கோயில். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.
மூலவர் | கயிலாசநாதர் |
அம்மன்/தாயார் | பெரிய நாயகி |
தல விருட்சம் | வில்வ மரம் |
தீர்த்தம் | சந்திர புஷ்கரிணி |
அமைத்தவர் | சோழர்கள் |
ஊர் | திங்களூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
தல வரலாறு
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தார்கள்.மந்திர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது, ஆலகால விஷம் வெளிவந்தது. அசுரர்கள் வாசுகியின் தலைப்பக்கத்திலும் தேவர்கள் வால் பக்கத்திலும் நின்று கொண்டு இருந்தனர். தேவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அந்த விஷத்தை தானே அருந்தினார். ஆனாலும் நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்து விட்டனர். அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான்.
அப்பூதி அடிகள்
அப்பூதி அடிகள் நாயனார் அவதாரத் தலம் இது .அப்பூதி அடிகள் நாயனார், திருநாவுக்கரசரின் பெயரில் தண்ணீர்ப் பந்தல் வைத்து நடத்திய தலமிது. அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் திங்களூரில் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்து வந்தார்.
ஒரு முறை திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் இல்லத்துக்கு வருகை புரிந்தார். திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும், என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக் கொண்டார். அதற்காகத் தோட்டத்தில் சென்று வாழை இலை பறித்து வருமாறு அப்பூதி அடிகள் சிறுவனான தமது மகனை அனுப்பி வைத்தார். ஆனால் வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்து விட்டான். தமது துயரத்தைத் திருநாவுக்கரசரிடம் காட்ட விரும்பாத அப்பூதி, பிணத்தைத் துணியால் மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார். ஆனால் நிலைமையை உணர்ந்து கொண்ட திருநாவுக்கரசர் சிறுவனின் பிணத்தைக் கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவன் முன் வைத்து மனமுருகப் பாடினார். சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் “திருப்பதிகம்” என்றழைக்கப்படுகின்றன.
கோவில் அமைப்பு
இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ள ஆலயத்துக்குத் தெற்கிலுள்ள வாயிலே பிரதான நுழைவாயிலாக உள்ளது. கருவறையில் இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அம்பாள் பெரியநாயகி சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு முன் சந்திர தீர்த்தம் உள்ளது.
வெளிப் பிராகாரம் வலம் வரும் போது, விஷம் தீர்த்த விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி, கோஷ்டத்தில் அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, கஜலெட்சுமி சந்நிதி மற்றும் சண்டிகேஸ்வரர் உடன் சண்டிகேஸ்வரி சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. இத்தலத்தின் ஷேத்திர பாலகரான சந்திரன், மேற்கு திசை நோக்கி இறைவனைப் பார்த்த படி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.
திருக்கோயில் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதி அடிகள், அவருடைய மனைவி, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோருடைய மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சந்திரன் விவரம்
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : பெரியநாயகி
சந்திரனின் நிறம் : வெண்மை
வச்திரம் : வெள்ளைத்துணி
தான்யம் : நெல்
உணவு : தயிர் சாதம்
மலர் : வெள்ளை அரளி
சந்திரன் தென்கிழக்கு திசை நோக்கி இருக்கிறார்.
தல பெருமை
குழந்தைக்கு முதல் சோறு கொடுப்பதை “அன்னப்பிரசானம்’ என்று அழைக்கப்படுகிறது. கிராம மக்கள் தங்கள் குல தெய்வக் கோயில்களில் இதைச் செய்வர். வசதி உள்ளவர்கள் பெரும்பாலும் குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதியில் இந்த சடங்கைச் செய்வது வழக்கம். தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.
அஸ்வினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். இவ்வாறு உண்ணும் குழந்தைகளுக்கு ஜலதேவதையின் அருளும், ஒளஷதி தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜலதேவதையின் அருளால், குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அண்டாது என்றும், அப்படியே வந்தாலும் ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளால் அது உடனே நீங்கி விடும் என்பதும் இத்தலத்து விசேஷம். குழந்தைகளுக்கு அம்புலியை காட்டி சோறூட்டுவது ஏதோ விளையாட்டுக்காக மட்டுமல்ல. அதில் ஆன்மீகக் காரணங்களும் அதில் புதைந்துள்ளன.
தல சிறப்பு
- தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.
- இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
- புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சந்திரனின் கிரகணங்கள் இறைவன் சிலை மீது விழுமாறு அமைக்கப்பட்டு இருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.
- குழந்தைகளுக்கு முதன்முதலாக அன்னம் ஊட்டுவதற்கு தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.
திருவிழா
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை
நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையும்.
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
முகவரி
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்,
திங்களூர்,
திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613 204.
தொலைபேசி எண் : +91- 4362262499, 9344589244, 9443586453