திருப்பதி ஏழுமலையான் கோவில் | Tirupati Temple

திருப்பதி-ஏழுமலையான்-கோவில்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறான்.

சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்றொரு திருநாமம்.

திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.

வாழ்வில் திருப்பம் நிச்சயம்” என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.

மூலவர் வெங்கடாசலபதி
உற்சவர் மலையப்பசாமி, கல்யாண வெங்கடேஸ்வரர்
தாயார் பத்மாவதி
தல விருட்சம் புளிய மரம்
தீர்த்தம் சுவாமி புஷ்கரிணி
ஆகமம் வைகானசம்
புராண பெயர்கள் கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, வேங்கடாத்ரி
ஊர் திருமலை
மாவட்டம் சித்தூர்
மாநிலம் ஆந்திரா
நாடு இந்தியா

சொல்லிலக்கணம்

திருப்பதி – திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு.

திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.

வரலாறு

உலகில் துயரங்கள் அநீதிகள் எல்லாம் அகன்று, சகல நன்மைகளும் பெருகவேண்டும் என்பதற்காகப் பெரும் யாகம் நடத்தத் தீர்மானித்தார்கள் முனிவர்கள். யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அளிப்பது என்று முடிவானது. மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு, பிருகு முனிவரிடம் விடப்பட்டது.

பிருகு முனிவருக்குப் பாதத்தில் ஞானக் கண் உண்டு. எதிர்காலத்தை உணரும் சக்தியும் உண்டு. இதைப் பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம்! இதனால் உண்டான அவரது கர்வத்தை பங்கம் செய்ய பரம்பொருளும் தருணம் எதிர்பார்த்திருந்தது.

பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு, அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார்.

பிரம்மா இதைக் கண்டித்தார். இதனால் கோபம் கொண்ட பிருகு, “பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு உலகில் பூஜையே நடக்காது” எனச் சபித்துவிட்டு, கயிலாயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அங்கே, சிவனும் பார்வதியும் தனித்திருந்தனர். அங்கும் தடைகளைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார். சிவனாரும் கோபத்துடன் அவரைக் கண்டித்தார். பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி, ஈசனுக்கும் சாபம் தந்தார் பிருகு. “பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும்” என்று சபித்தவர், வைகுண்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

அங்கே சயனத்தில் இருந்த திருமால், முனிவரின் வருகையை அறிந்தும் அறியாதவராக அரிதுயில் கொண்டிருந்தார். மிகுந்த கோபம் கொண்ட பிருகு, பகவானின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனால் எம்பெருமானோ கோபம் கொள்ளவில்லை.

குழந்தை மார்பில் உதைத்தால், தந்தைக்கு சினம் எழுமா என்ன? அதேநேரம், குழந்தையின் துடுக்குத்தனத்தை களைய வேண்டாமா? பிருகுவின் பாதம் நோகுமே என்று பிருகுவின் பாதத்தைப் பிடித்துவிடுபவர்போல் அதிலிருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டார் பகவான்.

பிருகு முனிவர் பகவானின் சாந்தத்தைக் கண்டு, அவரே யாக பலனை ஏற்கத் தகுதியான மூர்த்தி என்று முடிவு செய்தார். ஆனால், தான் வசிக்கும் எம்பெருமானின் திருமார்பை முனிவர் எட்டி உதைக்கிறார், அவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபம் திருமகளுக்கு. எனவே, லட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள்.

திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது. இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார். லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார்.

அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது.

பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள் ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார்.

அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை “அம்மா என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு “சீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள்.

தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள். இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான்.

யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு “பத்மம்” என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டான்.

ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள்.

சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது, கல்யாணத் துக்காக குபேரனிடம் கடன்பட்டு, அந்தக் கடனை இன்றுவரையிலும் அவர் செலுத்திக்கொண்டிருக்கும் கதையும் எல்லோரும் அறிந்ததுதானே! அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார்.

சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்துதங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது.

கோவில் அமைப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் மூன்று பிரகாரங்களை கொண்டது. இக்கோயிலில் உள்ள ரங்க மண்டபம் இசுலாமியர்களின் தாக்குதலில் இருந்து ரங்கநாதர் கோயிலை காக்க ரங்க நாதரை திருப்பதியில் கொண்டுவந்ததாக கூறப்படும் தொன்மத்தோடு தொடர்புடையது.

திருப்பதி கோயிலின் “முதல் பிரகாரம்” சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது. இதில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம் (துவஜஸ்தம்ப மண்டபம்), சாலுவ நரசிம்ம மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன.

விமான பிரதட்சண பிரகாரம் என்பது “இரண்டாவது பிரகாரம்”. இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் மற்றும் கர்ப்பகிரஹம் ஆகியவை உள்ளன.

“மூன்றாவது பிரகாரம்” வைகுண்ட பிரகாரம் ஆகும். இது ஆண்டுக்கொரு முறை வைகுண்ட ஏகாதேசியின் பொழுது திறக்கப்படுகிறது.

மூலவர்

மூலவரான வேங்கடாசலபதி நின்ற கோலத்தில் இருப்பவர். திருப்பதி மலைமேல் உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்றெல்லாம் போற்றுவர். பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவருக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? வெறுங்கை வேடன்!

பிரகார தெய்வங்கள்

வெங்கடாசலபதியை தரிசித்து விட்டு வெளியில் வந்ததும் முக்கோடி பிரகாரத்திற்கு நாம் வந்து சேர்கிறோம். அந்த பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் நான்கு கரங்களை உடையவர். சங்கு, சக்கரம் வைத்திருப்பார்.

வைகானஸ ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பிரம்மோற் ஸவத்தின்போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும்.

திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்

கீழ் திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு செல்ல வேண்டும்.

  • விருஷபாத்ரி – எருதுமலை
  • நீலாத்ரி – கருமலை
  • அஞ்சனாத்ரி – மைமலை
  • சேஷாத்ரி – பாம்பு மலை
  • கருடாத்ரி – கருடமலை
  • நாராயணாத்ரி – நாராயண மலை
  • வேங்கடாத்ரி – வேங்கட மலை

கோவிலின் சிறப்பு அம்சம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.

திருப்பதி திருமலையின் மூலஸ்தானம் ‘ஆனந்த நிலையம்’. பெயருக்கு ஏற்ப வாழ்வில் ஒரே ஒருமுறையேனும் கண்டடைய மாட்டோமா என்று திருமால் அடியவர்கள் ஏங்கித் தவிப்பதும், அவர்களுக்கு சில விநாடிப் பொழுதுகளில் பலகோடி புண்ணியம் தரும் பேரானந்த தரிசனம் வாய்ப்பதும் இங்குதான். தங்கத் தகடுகளால் வேயப்பட்டு, காணக்கிடைக்காத பேரழகுடன் திகழ்கிறது, ஆனந்த நிலையம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது.

ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. இதுதவிர மார்கழி மாத அர்சனைக்கும் வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது.

சிவராத்திரி அன்று திருப்பதியில் ‘க்ஷேத்ர பாலிகா’ என்ற உற்ஸவம் நடைபெறுகிறது. அன்று உற்ஸவப் பெருமாளுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு, திருவீதி உலா நடைபெறும்.

எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

திருப்பதி அலர்மேல் மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள்.

உள்பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50,000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

திருப்பதி பெருமாள் சிலையின் அதிசயம்

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும், அந்த விக்கிரகத்தில் ஏதேனும் ஓரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. அது மட்டுமா? எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும்.

ஆனால் திருவேங்கடவனின் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. திருப்பதி ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்ட உண்மையான நகைபோன்று மின்னுவது அற்புதம்தான்!

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதால், எப்போதும் குளிர் நிறைந்திருக்கும் திருப்பதியில்.அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏழுமலையானின் திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும் என்கிறார்கள்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏழுமலையானுக்கு அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

திருப்பதி ஏழுமலையான் திருமேனிக்குப் பச்சைக்கற்பூரம் சாத்துகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை இரசாயனம். இக்கற்பூரம் அரிப்பைக் கொடுக்கும் ஒரு வகை அமிலம் ஆகும். இந்த பச்சைக்கற்பூரத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், ஏழுமலையான் திருமேனிக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவது இல்லை. ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட மண் சட்டியும், தயிர் சாதமும் பிரசாதமாகக் கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகின்றனர் பக்தர்கள்.

ஏழுமலையான் வஸ்திரம்

ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது ‘மேல் சாத்து வஸ்திரம்’. பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

‘உள்சாத்து வஸ்திரம்’ ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது.

சிலா தோரணம்

திருப்பதி ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் ‘சிலா தோரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இங்கு மட்டுமே காணப்படும் இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. இரு பெரிய பாறைகள் முத்தமிட்டுக் கொள்வது போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் அபிஷேக பொருள்

ஏழுமலையானின் அபிஷேகத்துக்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரிஸ் நகரில் இருந்து வாசனைத் திரவியங்கள் வரவழைக் கப்படுகின்றனவாம்.

தங்கத் தாம்பாளம் ஒன்றில் சந்தனத்தோடு வாசனைத் திரவியங்கள் சேர்த்துக் கரைத்து அபிஷேகத்தில் சேர்க்கப்படும். அத்துடன் 51 வட்டில் (சல்லடை போன்ற அபிஷேகத் தட்டு) பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும்.

காலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்துக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு ஆகும். அபிஷேகத்தின்போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பதாக ஐதீகம்!

பெருமாளுக்காக சீனாவிலிருந்து சீனச் சூடம், அகில், சந்தனம், அம்பர், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்களும் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

ஏழுமலையான் ஆபரணங்கள்

திருப்பதி ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1000 கோடி. பெருமாளின் நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை; சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டுக்கு ஒரு முறை உபரியான நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

ஏழுமலையானின் சாளக் கிராம தங்கமாலை சுமார் 12 கிலோ எடை கொண்டது. இதைச் சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை.

சூரிய கடாரி 5 கிலோ எடை; பாத கவசம் 375 கிலோ; கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம், உலகில் வேறெங்கும், எவரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.

திருப்பதியில் முக்கிய தீர்த்தங்கள்

  • குமார தீர்த்தம்
  • தும்புரு தீர்த்தம்
  • ராமகிருஷ்ண தீர்த்தம்
  • ஆகாச கங்கை
  • பாண்டு தீர்த்தம்
  • பாபவிநாச தீர்த்தம்
  • ஸ்வாமி புஷ்கரணி

அணையா விளக்குகள்

பெருமாள் வீற்றிருக்கும் கருவறையில் எரியும் மண் விளக்குகள் ஒருபோதும் அணைந்தது இல்லை என்று சொல்லப்படுகிறது. அது எப்போது ஏற்பட்டது குறித்த பதிவு இல்லை என்றாலும் ஏற்பட்ட நாள் முதல் இன்று வரை அணைந்தது இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதிசய மூட்டும் மலர்மாலைகள்

ஏழுமலையானுக்கு சாத்திய மலர்மாலைகள் மறுநாள் நன்கு சுத்தம் செய்த பின் அவற்றை அர்ச்சகர்கள் கருவறை கூடையில் போடுவதில்லை. அதற்கு மாறாக கோவிலின் பின்புறத்தில் உள்ள அருவியில் கொட்டுகின்றனர்.

அங்கு கொட்டப்படும் பூக்கள் ஒரு நாளும் அங்கு தென்படுவது இல்லையாம். அவை அனைத்தும் கோவிலில்  இருந்து மிகத்தொலைவில் ஏற்காடு என்ற கிராமத்திற்கு சென்று தேங்கி நிற்கின்றன.

சிலையில்  உண்மையான முடி

திருப்பதி ஏழுமலையான் திருமேனியில் பதிக்கப்பட்ட முடி உண்மையானது. ஏனென்றால் பெருமாள் பூமிக்கு வந்த போது நிகழ்ந்த போர்க்களத்தில் அவருடைய முடியினை சிலவற்றை இழந்து உள்ளார்.

அதை அறிந்த காந்தர்வ பேரரசு நீலாதேவி தன்னுடைய   கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்து விட்டு  அதை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டியுள்ளார். இதை அறிந்த பெருமாள் தன் தலையில் சூடிக் கொண்டார்.

இந்த காரணத்தினால் தான்  திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பெருமாளுக்கு மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவது மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது.

மூலவர் ஏழுமலையானைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் (கி.பி.966 ஜூன் 8ம் தேதி) வெள்ளியால் செய்யப்பட்டது.

இந்த விக்கிரகத்துக்குப் பல்லவ குறுநில மன்னன் சக்திவிடங்கனின் பட்டத்தரசி காடவன் பெருந்தேவி நகைகளைத் தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் செய்து வைத்ததாகத் தகவல் உண்டு. முதலாம் குலோத்துங்க சோழன் திருமலைக்கு வந்து காணிக்கை செலுத்தியுள்ளார்.

திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும்.

இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடுகாப்புரிமையை பெற்றதாகும்.

இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம் போன்ற மூல பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

நடைபாதை

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் நடைபாதை சிறப்பானதாகும். இப்பாதை கீழ்திருப்பதியிருந்து தொடங்குகிறது. இப்பாதையின் இருபுறமும் ஆழ்வார்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அலிபிரி பகுதியில் கருடாழ்வாரும், கபில தீர்ததமும் அமைந்துள்ளன. இதனைக் கடந்து செல்கையில் ஆஞ்சிநேயர் சிலையும், முழங்கால் முடிச்சு, காளிகோபுரம் போன்ற இடங்களும் காணப்படுகின்றன.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி போன்ற வைணவப் பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா  மிகவும் விசேஷமானது! வெங்கடேஸ்வரர் சர்வ அலங்கார பூஷிதராக நான்மாடவீதிகளில் தேர் பவனி வருகிறார்.

புரட்டாசி பிரம்மோற்ஸவம் மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது. பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம்! இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திருமலையில் வந்து குவிகின்றனர்.

பிரம்மோற்சவம் ஆண்டு சேவை

தெப்போற்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக ஐந்து நாட்கள் நடக்கும். பங்குனி ஏகாதசியன்று ராமர், சீதா, லட்சுமணருடன் சுவாமி புஷ்கரணி தெப்பத்தில் உலா வருவர்.

அடுத்த நாள் துவாதசியன்று ருக்மணியுடன் ஸ்ரீகிருஷ்ணர் உலா வருவார். இதையடுத்த மூன்று நாட்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்ப உலா வருவர்.

நிகழ்ச்சி முடிந்தபிறகு சுவாமியை அருகில் சென்று பார்க்க கட்டணம் ரூ.2500 5 பேர் பார்க்கலாம்.

மாலை 5 மணிக்கு இந்த சேவை ஆரம்பமாகும். பட்டு வஸ்திரம், ரவிக்கைத்துணி, ஒரு லட்டு, ஒரு வடை பிரசாதமாக வழங்கப்படும்.

வசந்த உற்சவம்

சித்திரை மாதம் (மார்ச் / ஏப்ரல்) திரயோதசி, சதுர்த்தசி மற்றும் பவுர்ணமி நாட்களில் இந்த நிகழ்ச்சி நடக்கும்.

இந்த நாட்களில் மலையப்ப சுவாமி மற்றும் பரிவார தேவதைகள் வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக வருவர். அங்கு அபிஷேகம் நடத்தப்படும்.

மூன்றாவது நாள் சுவாமியுடன் சீதாராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி, சத்யபாமா ஆகியோர் ஊர்வலத்தில் வருவார்கள்.

மதியம் 1.30 மணிக்கு இந்த சேவை ஆரம்பமாகும். பட்டு அங்கவஸ்திரம், ரவிக்கைத் துணி, 20 தோசை, 6 வடை மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்படும்.

பத்மாவதி பரிநயம்

வைகாசி மாதம் நவமி, தசமி மற்றும் ஏகாதசி திதி நாட்களில் பத்மாவதி பரிநயம் நிகழ்ச்சி நாராயணகிரி தோட்டத்தில் நடக்கும். இந்த தோட்டத்தில்தான் சீனிவாசனுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடந்தது.

இந்நாட்களில் மலையப்ப சுவாமி யானை, குதிரை, கருட வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தனித்தனி பல்லக்கில் வருவார்கள். அங்கு அவர்களுக்கு திருமணம் நடக்கும். அதன்பிறகு கொலுவு நிகழ்ச்சி நடத்தப்படும்.

ஹரிகதை மற்றும் கலைநிகழ்ச்சிகள் இந்நிகழ்ச்சியை ஒட்டி நடத்தப்படுகிறது. ரூ.5000 செலுத்தி 5 பேர் அருகில் இருந்து இந்த நிகழ்ச்சியை காணலாம். மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *