உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா உள்ளது. வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. விற்கப்படும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண் ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் குறியீட்டு கோடு மற்றும் பதிவு எண் விவரங்களுடன் ஒவ்வொரு வாகனத்திலும் லைசென்ஸ் நம்பர் பிளேட் பொறுத்தப்பட்டிருப்பதை காண்பீர்கள்.
வெள்ளை நிற நம்பர் பிளேட்
இந்த வெள்ளை எண் தகடு இந்தியாவில் மிகவும் பொதுவானது. இந்த வகையான உரிமத் தகடுகள் வெள்ளை பின்னணியில் கருப்பு எழுத்துக்களில் பதிவு எண்ணைக் கொண்டுள்ளன. இந்த வெள்ளை உரிமத் தகடு வணிகப் பயன்பாட்டிற்குப் பதிலாக தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கானது. இந்த வாகனங்களில் சரக்கு அல்லது வாடகை பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
மஞ்சள் நிற நம்பர் பிளேட்
இந்த நம்பர் பிளேட்டில் பதிவு எண் மஞ்சள் பின்னணியில் கருப்பு எழுத்துக்களில் அச்சிடப்பட்டு இருக்கும். டாக்ஸி, ஆட்டோ, சரக்கு வாகனங்கள் போன்ற வர்த்தக நோக்கிலான வாகனங்களுக்கு இந்த மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த வாகனங்களுக்கு தனியார் கார்களை விட வித்தியாசமான வரி விதிக்கப்படுகிறது. மேலும் இந்த வாகனங்களை ஓட்டுபவர்கள் வணிக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சிவப்பு நிற நம்பர் பிளேட்
வாகனப் பதிவு விவரங்களை தற்காலிகமாக பதிவு செய்ய இவ்வகை நம்பர் பிளேட் பயன்படுத்தப்படுகின்றன. சிவப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துக்களுடன் எண்கள் உள்ளன. சாலைப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்து நிரந்தரப் பதிவு எண் கிடைக்கும் வரை இந்த நம்பர் பிளேட் காரில் பொருத்தப்பட்டிருக்கும். இது ஒரு மாதம் மட்டுமே செல்லுபடியாகும். பல மாநிலங்கள் இந்த உரிமத் தகடுகளைக் கொண்ட வாகனங்களை சாலையில் அனுமதிக்கவில்லை.
பச்சை நிற நம்பர் பிளேட்
தற்போது, நம் நாட்டில் பச்சை உரிமத் தகடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வகை நம்பர் பிளேட் மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் நம்பர் பிளேட் எண் வெள்ளை நிறத்தில் இருந்தால், அது ஒரு தனியார் கார். மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது வணிக மின்சார வாகனம்.
சிவப்பு நிற பிளேட்டில் இந்திய தேசிய சின்னம்
இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் வாகனங்களில் மட்டுமே இத்தகைய நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேல் நோக்கிய அம்புகள் இருக்கும் நம்பர் பிளேட்
இந்த வகையான நம்பர் பிளேட் இராணுவ வாகனங்களுக்கு மட்டுமே பொருத்தமானவை. முதல் அல்லது இரண்டாவது எழுத்துக்குப் பின் வரும் அம்பு குறிகள் பிராட் ஏரோ என அழைக்கப்படுகின்றன. இந்த அம்புக்குறிகளுக்குப் பின் வரும் எண்கள் வாகனம் வாங்கிய ஆண்டைக் குறிக்கின்றன. அடுத்த இலக்கமானது இராணுவ தளத்திற்கான குறியீட்டைக் குறிக்கிறது. அடுத்தது பதிவு எண்.
கருப்பு நிற நம்பர் பிளேட்
நம்பர் பிளேட் கருப்பு பின்னணியில் வெள்ளை நிறத்தில் எண் இருந்தால், வாகனம் சொகுசு ஹோட்டலுக்கு சொந்தமானது. இது வணிக வாகனமாக கருதப்படுகிறது. இருப்பினும், அதன் ஓட்டுநர்கள் வணிக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
பாரத் சீரிஸ்
‘BH’ அச்சிடப்பட்ட பாரத் வரிசை எண் தகடுகளைத் தாங்கிய வாகனங்களையும் பொதுமக்கள் குறிப்பிடலாம். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் கார்களில் இந்த பாரத் வரிசை எண் தகடுகளைப் பயன்படுத்தலாம். வாகன உரிமையாளர்கள் பிற மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் சென்று குடியேறும் போது மறுபடியும் பதிவு செய்வதில் ஏற்படும் சிரமங்களை நீக்குவதற்காக இந்த நம்பர் பிளேட்டு அறிமுகப்படுத்தப்பட்டன.
நீல நிற நம்பர் பிளேட்
வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் நீல நிற உரிமத் தகடுகள் மற்றும் வெள்ளை உரிமத் தகடு எண்களைக் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்துவார்கள். வழக்கமான கார்களில் காணப்படும் மாநில குறிப்பிட்ட வரிசை எண் இதில் இருக்காது. அதற்கு பதிலாக, தூதுரக அதிகாரியின் நாட்டிற்குரிய குறியீட்டு எண்கள் பதியப்பட்டிருக்கும். இது மூன்று வகையான குறியீடு வரிகளையும் கொண்டுள்ளது: CC, UN மற்றும் CD.
இதையும் படிக்கலாம் : இந்திய அடிப்படை சட்டங்கள் தெரியுமா..?