உததியறல் மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ ருண்ட நீலமிக
வொளிதிகழு மன்றல் ஓதிநரை – பஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேலவிழி
மிடைகடையொ துங்கு பீளைகளு
முடைதயிர்பி திர்ந்த தோஇதென – வெம்புலாலாய்
மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர் – கொங்கைதோலாய்
வனமழியு மங்கை மாதர்களின்
நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
வழியடிமை யன்பு கூருமது – சிந்தியேனோ
இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனும்
எறிதிரைய லம்பு பாலுததி – நஞ்சராமேல்
இருவிழிது யின்ற நாரணனும்
உமைமருவு சந்த்ர சேகரனும்
இமையவர்வ ணங்கு வாசவனும் – நின்றுதாழும்
முதல்வசுக மைந்த பீடிகையில்
அகிலசக அண்ட நாயகிதன்
மகிழ்முலைசு ரந்த பாலமுத – முண்டவேளே
முளைமுருகு சங்கு வீசியலை
முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
முதலிவரு செந்தில் வாழ்வுதரு – தம்பிரானே.
இதையும் படிக்கலாம் : உருக்கம் பேசிய (திருச்செந்தூர்) – திருப்புகழ் 35