உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. உதடு வெடிப்பு அதிகமானால் அது நோய்த்தொற்றாகி விடும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை குளிர்ச்சி தன்மை கொண்டது. இது பூஞ்சை எதிர்ப்பு பண்பு கொண்டது. உதடு உலர்ந்து வெடிப்புடன் வலியும் ஏற்பட்டால் கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம். இது பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடக் கூடியது.
கற்றாழை ஜெல்லை எடுத்து குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் குளிரவைக்க வேண்டும். பின்பு ஆன்டி பாக்டீரியல் கிளீன்சர் கொண்டு முகத்தை சுத்தப்படுத்திவிட்டு கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
தயிர்
தயிர் ஒரு நல்ல பாக்டீரியாக்களை கொண்டது. உதடு வெடிப்புக்கு மற்றொரு ஆன்டி பாக்டீரியல் தீர்வாக தயிர் அமைந்திருக்கிறது. தயிர் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதுபோல் வெடிப்பு உள்ள சருமத்தில் தயிரை தடவி வரலாம். அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா எரிச்சலை குறைப்பதோடு சருமத்திற்கும் இதமளிக்கும். இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தயிரை தடவி விட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்
இந்த எண்ணெய் சரும பிரச்சினைக்கும் தீர்வு தரக்கூடியது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மையும் கொண்டது. வறண்ட, வறட்சியான சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் தரும்.
தேங்காய் எண்ணெய்யுடன் அதே அளவு பாதாம் எண்ணெய் கலந்து உதடு, வாய் மூலையில் வெடிப்பு ஏற்பட்டிருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரண்டு, மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எந்தவொரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்கும் தன்மை இதற்கு இருக்கிறது.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் சரும வறட்சியை சரி செய்யக்கூடியது. வெடிப்பு, வலி, நோய்த்தொற்றை தடுக்கும் ஆன்டி பாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளது.
உதடு, வாய் மூலைகளில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெய் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய்யுடன் இரண்டு துளி டீ ட்ரீ ஆயில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதனை காட்டன் பஞ்சுவில் முக்கி வெடிப்புள்ள பகுதியில் தடவி விட்டு அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் விரைவில் வெடிப்பு குணமாகிவிடும்.
சிலருடைய சருமத்திற்கு விளக்கெண்ணெய் ஒத்துக்கொள்ளாது. அப்படி ஒவ்வாமை பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை தவிர்த்துவிடலாம்.