
வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்
பினுக்கெதி ராகும் – விழிமாதர்
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
சமத்திடை போய்வெந் – துயர்மூழ்கிக்
கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
கருக்குழி தோறுங் – கவிழாதே
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
கழற்புக ழோதுங் – கலைதாராய்
புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
சியைப்புணர் வாகம் – புயவேளே
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
பொருக்கெழ வானும் – புகைமூளச்
சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
திறக்கம ராடுந் – திறல்வேலா
திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
திருத்தணி மேவும் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : வெற்றி செயவுற்ற (திருத்தணிகை) – திருப்புகழ் 302