ஆடிப்பூரம் 2024 எப்போது?

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனை வழிபடுவதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நன்னாளில் ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் கைகூடும், அம்பிகையை வணங்கி வளையல் வாங்கிக் கொடுத்தால் திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். அன்றைய தினம், அம்மன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவதோடு, அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்கும் நிகழ்வும் நடத்தப்படும். இந்த நாளில் பக்தர்கள், பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாகவும் ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

அம்மன் கோவில்களில் பிரசாதமாக கொடுக்கும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், மனம் போல் மாங்கல்யம் அமையும்.

அம்பிகா அவதாரம்

andal
ஆண்டாள்

ஆடி மாதம் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பாளுக்கு சிறப்பு வாய்ந்த நாள். சித்தர்களும், முனிவர்களும் இந்நாளில் தான் தவத்தை மேற்கொண்டதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஆடி மாதம் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நன்னாளில் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

பூரம் நட்சத்திர மகிமை

பூரம் என்பது சுக்கிரனால் ஆளப்படும் நட்சத்திரம். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசுவார்கள். அனைவரையும் நேசிப்பார்கள். அனைவரையும் நேசிக்க வைப்பார்கள். சுக்கிரனின் தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். அதனால் தான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை காதலித்து மணந்தாள். காதல் கைகூடவும், மனதிற்கு பிடித்த நபரை கை பிடிக்கவும் சுக்கிர பகவானின் அருள் வேண்டும். சுக்கிரனின் அருள் இருந்தால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும், தாம்பத்ய ஒற்றுமைக்கும் காரணம் சுக்கிரன் தான். அதனால் தான் பூரம் நட்சத்திரத்தில் விரதம் இருப்பது திருமண அனுகூலத்தையும் குழந்தை பாக்கியத்தையும் தரும்.

ஆடிப்பூரம் 2024 எப்போது?

ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். தமிழ் மாதங்களில் 4வது மாதமாக வரும் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அன்று அம்பாள் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றது. இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 7 புதன்கிழமை அன்று வருகிறது.

ஆண்டாள் கல்யாணம்

andal kalyanam
ஆண்டாள் கல்யாணம்

ஆடிப்பூர நாளில் பெருமாளையே கணவனாக நினைத்து மாலையை சூடிக்கொடுத்த சுடர்கொடியாளை தரிசனம் செய்தால் திருமண வரம் கிடைக்கும் ஆனந்தமான வாழ்வு அமையும். சஷ்டாஷ்டக தோஷம் இருக்கும் தம்பதியரும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த தம்பதியர்கள், தொழில் போட்டியால் பிரிந்த கூட்டாளிகள் ஒற்றுமை ஏற்பட ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்க தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். பிரிந்தவர்கள் கூடுவார்கள். பகைவர்களும் நண்பர்கள் ஆவார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த நாளாக ஆண்டாள் ஜெயந்தியும் மிக விமரிசையாக இதே நாளில் கொண்டாடப்படுகிறது.

அம்மனுக்கு வளைகாப்பு

adi pooram
ஆடிப்பூரம்

ஆடிப்பூரத்தன்று உலக மக்களைக் காக்கும் சக்தியாக அம்பாள் விளங்குகிறார் என்பது ஐதீகம். ஆடிப்பூரத்தன்று சிவன் கோவிலில் அன்னையர்களுக்கு வளைகாப்பு விழா நடைபெறுகிறது. தாய்மை என்பது பெண்களின் தனிச் சிறப்பு. எனவே, உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். ஆனால் அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். தாய்மை பேறுக்காக தவமிருக்கும் பெண்கள் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவதற்காக வளையல்களை வாங்கிக் கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.

இந்த நாளில், அம்மனுக்கு வளைகாப்பு விழா, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், நெல்லையப்பர், அழகர் கோவில், கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சியம்மன், திருவண்ணாமலை உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் நடைபெறும். அதோடு சிவன் கோவில்களிலும் அம்மனை அலங்கரித்து சிறப்பு வழிபாட்டு பூஜைகள், வளையல் சார்த்துதல் நிகழ்ச்சி நடைபெறும்.

கோயில்களில் அம்மனுக்குப் படைக்கப்பட்ட வளையல் மாலைகளில் இருந்து பெறப்படும் வளையல்களை பெண்கள் அணிந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், அம்பாளை கோவில்களில் மட்டுமின்றி, வீட்டிலும் எளிமையாக வழிபடுவது குழந்தை பாக்கியத்தை தரும். திருமணம் ஆக வேண்டும் என காத்துக் கொண்டிருப்பவர்கள், குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்க கூடியவர்கள் ஆடிப்பூரத்தில் வழிபடலாம்.

இதையும் படிக்கலாம் : ஆடி மாத 2024 முக்கிய நாட்கள் விபரம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *