விநாயகர் சதுர்த்தி இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஆகும். முழு முதற்கடவுளான விநாயகர் அவதரித்த நாளை தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், புராணங்களில் கூறப்பட்டுள்ளபடி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் தான் விநாயகர் அவதரித்ததாகவும், ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆவணி மாதம் விநாயகரை வழிபடுவதற்குரிய மாதமாகும்.
விநாயகர் சதுர்த்தி 2024 எப்போது?
விநாயக சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி தான் சூரிய உதய காலத்தின் போது சதுர்த்தி திதி உள்ளதால், அந்த நாளையே விநாயகர் சதுர்த்தி நாளாக கொண்டாடப்படுகிறது. விநாயக சதுர்த்தி அன்று வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்வார்கள். பின்னர் சதுர்தசி அன்று விநாயகர் சிலையை கடல் அல்லது ஆற்றில் கரைப்பார்கள்.
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உகந்த நேரம்
விநாயகர் சதுர்த்திக்கு முந்தய நாள் வீட்டை சுத்தம் செய்யவேண்டும். விநாயகர் தினத்தன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு விநாயகர் சிலைக்கு இடத்தை செய்து, மனைப்பலகையில் அரிசி மாவினால் கோலமிட்டு அலங்கரிக்கவும். அதன்பிறகு கடைக்குச் சென்று விநாயகர் சிலையை வாங்கி பூஜை செய்து வழிபடலாம்.
செப்டம்பர் 7ம் தேதி சனிக்கிழமை என்பதால் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலமாகும். அதேபோல், 01.30 முதல் 3 மணி வரையிலான நேரம் எமகண்ட நேரம். இந்த காலகட்டத்தில் விநாயகர் சிலைகளை வாங்கவோ, விநாயக வழிபாடு செய்யவோ கூடாது.
விநாயகர் சிலை வாங்க உகந்த நேரம்
செப்டம்பர் 7ம் தேதி காலை 7.35 முதல் 8.45 வரை உள்ள நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து மனைப்பலகையில் வைத்து வழிபடலாம். அந்த நேரத்தில் முடியாவிட்டால் காலை 10.30 மணிக்கு மேல் விநாயகர் சிலைகளை வாங்கி வழிபடலாம். விநாயகர் வழிபாட்டை 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும். அதேபோல், மூன்றாவது அல்லது ஐந்தாவது நாளில், விநாயகர் சிலையை எடுத்து சென்று நீர் நிலையில் கரைக்கலாம் அல்லது அருகிலுள்ள கோவிலில் வைத்து விடலாம்.
இந்நாளில் விநாயகப் பெருமானை மனதார வழிபட்டால் செல்வச் செழிப்பும் வாழ்வில் மகிழ்ச்சியும் பெருகும்.
விநாயகரை வழிபடும் முறை
அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, நாமும் குளித்து முடித்து சுத்தமாக சென்று விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். சிலையை சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் மூடி, வைக்கவும்.
விநாயகர் சிலையை வீட்டின் வட கிழக்கு திசையிலேயே வைக்க வேண்டும். விநாயகர் சிலை, மேற்கு நோக்கி இருக்கும் வகையிலேயே வைக்க வேண்டும்.
அதன் பிறகு விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை காய்ச்சிய பால், சுண்டல், அப்பம் மற்றும் சர்க்கரை பொங்கல் என இவை அனைத்தினையும் செய்து வழிபடலாம்.
அதோடு தேங்காய், வாழைப்பழம், வெற்றி மற்றும் பாக்கு என இதனையும் வைத்து விட வேண்டும். மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் எதை வேண்டுமானாலும் செய்து வழிபடலாம். மேலும் அன்று அருகம்புல் மற்றும் எருக்கம் பூ இருந்தாலும் வைத்து வழிபடலாம். இத்தகைய பொருட்களை எல்லாம் வைத்து முடித்த பிறகு சாம்பிராணி போட்டு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.
விநாயகர் பூஜை வழிபாட்டிற்கு பிறகு 3 நாட்கள் கழித்த பிறகு மஞ்சள் அல்லது களிமண்ணால் செய்த விநாயகரை நீரில் கரைத்து விடுங்கள். இவ்வாறு வழிபடுவதன் மூலம் மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நல்ல வழி உண்டாகும்.
விநாயகர் சதுர்த்தி வரலாறு
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே விநாயக சதுர்த்தி விழா நடத்தப்பட்டிருக்கிறது. இது இந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
சுதந்திர போராட்டக் காலத்தில், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்களிடையே தேசியம் வளர ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தார்.
இது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்குகிறார்கள். மகாராட்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்துகின்றனர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும், இதன் போது வழங்குவர்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்கின்றன. இங்கே வைக்கப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கின்றனர். வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி
புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடன் தேவர்கள் முறையிடதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான்.
இவர் ஒரு ஆவணி மாத சதுர்த்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, அன்று முதல் இந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாம் : விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் அர்த்தம் என்ன?