நவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்று. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறோம்.
ஆயுத பூஜை வரலாறு
புராண கதைகளின் படி ஆயுத பூஜையானது நவராத்திரியுடன் தொடர்புடையது. தேவி துர்கா, மஹிஷாசுரா என்ற அரக்கனை அஷ்டமி மற்றும் நவமி சந்திப்பில் கொன்றதாகவும், அதன் பின்னர் வதத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேவி கீழே போட்டு விட்டதாகவும் நம்பப்படுகிறது. அந்த நாளை தான் ஆயுத பூஜையாக கொண்டாட தொடங்கினர். மேலும் ஆயுத பூஜை என்பது அரக்க ராஜாவை, தேவி துர்கா வீழ்த்தியதன் வெற்றியின் கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது.
மகாபாரத புராணத்தின் படி, நாடுகடத்தப்பட்டதன் காரணமாக பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் தனது ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் கீழ் மறைத்து வைத்து சென்றான். வனவாசம் முடிந்து ஒரு வருடத்திற்கு பின்னர் பாண்டவர்கள் திரும்பியபோது, தாங்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் அதே இடத்தில் இத்தனை நாளாக இன்னும் இருப்பதைக் கண்டு ஆச்சரிப்பட்டனர். ஆயுதங்களை மீட்டெடுத்த பிறகு, அவர்கள் வழிபாடு நடத்தி, குருக்ஷேத்திரப் போருக்கு சென்று வெற்றியை தமதாக்கினர். பின்னர், அவர்கள் விஜயதசமி நாளில் திரும்பி வந்து வன்னி மரத்தையும் வணங்கி சென்றனர். எனவே இந்தியாவின் சில பகுதிகளில், தசமி நாளில் வன்னி மரங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகின்றது.
ஆயுத பூஜை எதற்காக?
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது.
வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை ஆகும்.
வருடம் முழுவதும் நமக்காக நம் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்களுக்கு இந்த ஒரு நாள் நாம் நன்றி சொல்வது தான் ஆயுத பூஜை.
ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
வழிபடும் முறை
ஆயுத பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும். அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம். தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும். சுத்தம் செய்த பின் அவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும். பூஜையின் போது பொரி, பழங்கள், பேரீச்சம் பழம் போன்றவற்றை நைவேதினமாக படைத்து வழிப்படலாம்.
ஆயுத பூஜை சிறப்பு
செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும்.
ஆயுத பூஜையன்று, ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.
ஆயுதபூஜையன்று, அறிவாற்றல் அள்ளி வழங்கும் சரஸ்வதி தேவி, தூய்மை உள்ளத்தை வழங்கம் பார்வதி மற்றும் செல்வச் செழிப்பை அளிக்கும் தேவி லட்சுமி ஆகியோரை தவறாமல் வழிபட வேண்டும்.
இந்த நாளின் வழிபாட்டில், துன்பங்களும் தடைகளும் நீங்கி கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையில் நல்லதையே ஆசிர்வதிக்க வேண்டும் என்று பெண் தெய்வங்களிடம் வழிப்படுவது நன்மையை உண்டாக்கும்.
ஆயுத பூஜை மந்திரம்
‘ஜெயதே வரதே தேவி தஷ்மயம்பராஜிதே
தரயாமி பூஜே தக்ஷா ஜெயலாபபவித்தியே’
ஆயுதபூஜை நாளில், ஆயுதங்கள் அல்லது புத்தகங்களை ஒருபோதும் பூஜையில் இருந்து எடுக்கவோ, நகர்த்தவோ கூடாது.
இதையும் படிக்கலாம் : நவராத்திரி உருவான கதையும் கொலுபடிகளின் தத்துவமும்