ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர். போகும் போதோ வரும் போதோ குல தெய்வத்தை வழிபடலாம்.
தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
ஆலயம் வர இயலாதவர்கள், வெளிநாடு வாசிகள், இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், மிகுந்த விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
முக்கிய பரிகார பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள். பூஜைக்கு தங்கள் பிறந்த நட்சத்திரம், ஜென்மானுஜன்ம நட்சத்திரம், அல்லது அமாவாசை, பவுர்ணமி, சித்திரை 1 போன்றவை உகந்தவை.
தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் தீட்டு வீட்டிற்கு செல்லாதீர். நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
காலை அணிந்த உடையை மாலை நேர பூஜைக்கு அணியாதீர்.ராகுகால பூஜையைத் தவிர மற்ற பரிகார பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது. அங்கே அதிகம் பேரம் பேச வேண்டாம். பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம். நெய் அல்லது எண்ணையை மற்றவர்கள் விளக்குகளில ஊற்ற வேண்டாம்.
அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம். பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும். சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
கஜ பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.
வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.
விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும். சங்கல்பம் மிக முக்கியம்.
கோபுர தரிசனம் கோடி நன்மை. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக அவரருகே சென்று மனதினுள் ‘சிவயநம’ என முடியும் அளவு கூறி வழிபடுவதே நன்று. அவர் ஆழ்ந்த சிவ தியானத்தில் எப்போதும் இருப்பவராதலால் கையை தட்டவோ சொடுக்குப் போடவோ வேண்டாம்.
கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.
தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 35 வயதிற்குள் செய்து விடுங்கள்.
கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
ஆண்டவன் நினைத்தால் மட்டுமே முறையான பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும். ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.
இதையும் படிக்கலாம் : பில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் விலக பரிகாரம்..!!