குறள் 151 :
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
மு.வரதராசனார் உரை
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
மு.கருணாநிதி உரை
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.
மணக்குடவர் உரை
தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம். இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.
குறள் 152 :
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
மு.வரதராசனார் உரை
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
மு.கருணாநிதி உரை
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.
மணக்குடவர் உரை
பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.
குறள் 153 :
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
மு.வரதராசனார் உரை
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
மு.கருணாநிதி உரை
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
சாலமன் பாப்பையா உரை
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.
மணக்குடவர் உரை
வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல். புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.
குறள் 154 :
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
மு.வரதராசனார் உரை
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
மு.கருணாநிதி உரை
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.
சாலமன் பாப்பையா உரை
சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்.
மணக்குடவர் உரை
தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின், பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும். நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.
குறள் 155 :
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
மு.வரதராசனார் உரை
( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார், ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
மு.கருணாநிதி உரை
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
மணக்குடவர் உரை
தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.
குறள் 156 :
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
மு.வரதராசனார் உரை
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
மு.கருணாநிதி உரை
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
மணக்குடவர் உரை
ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம். இது புகழுண்டா மென்றது.
குறள் 157 :
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
மு.வரதராசனார் உரை
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
மு.கருணாநிதி உரை
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை
கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.
மணக்குடவர் உரை
தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று.
குறள் 158 :
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
மு.வரதராசனார் உரை
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
மு.கருணாநிதி உரை
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.
சாலமன் பாப்பையா உரை
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
மணக்குடவர் உரை
தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக. இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.
குறள் 159 :
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
மு.வரதராசனார் உரை
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
மு.கருணாநிதி உரை
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
சாலமன் பாப்பையா உரை
நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.
மணக்குடவர் உரை
மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார். இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.
குறள் 160 :
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
மு.வரதராசனார் உரை
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
மு.கருணாநிதி உரை
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.
மணக்குடவர் உரை
உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின், இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.
திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை