திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை

குறள் 161 :

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

மு.வரதராசனார் உரை

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

மு.கருணாநிதி உரை

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.

மணக்குடவர் உரை

ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.

குறள் 162 :

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.

மு.வரதராசனார் உரை

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

மு.கருணாநிதி உரை

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை

எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.

மணக்குடவர் உரை

விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை. இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.

குறள் 163 :

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்.

மு.வரதராசனார் உரை

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

மு.கருணாநிதி உரை

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

மணக்குடவர் உரை

தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான். இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.

குறள் 164 :

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து.

மு.வரதராசனார் உரை

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

மு.கருணாநிதி உரை

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.

மணக்குடவர் உரை

அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.

குறள் 165 :

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்காயும் கேடீன் பது.

மு.வரதராசனார் உரை

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

மு.கருணாநிதி உரை

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.

மணக்குடவர் உரை

அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.

குறள் 166 :

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.

மு.வரதராசனார் உரை

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

மு.கருணாநிதி உரை

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை

பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

மணக்குடவர் உரை

பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும். இது நல்குரவு தருமென்றது.

குறள் 167 :

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

மு.வரதராசனார் உரை

பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

மு.கருணாநிதி உரை

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

மணக்குடவர் உரை

அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

குறள் 168 :

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

மு.வரதராசனார் உரை

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

மு.கருணாநிதி உரை

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

மணக்குடவர் உரை

அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.

குறள் 169 :

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

மு.வரதராசனார் உரை

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.

மு.கருணாநிதி உரை

பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க.

மணக்குடவர் உரை

அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்.

குறள் 170 :

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

மு.வரதராசனார் உரை

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

மு.கருணாநிதி உரை

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.

மணக்குடவர் உரை

அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.

திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *