ஐப்பசி பவுர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.
ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தன்று தான், சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து 16 கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார். இந்நாளில் நிலவு அதிகப் பொலிவுடன் இருக்கும். சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி. அதனால் சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் அன்னாபிஷேக வழிபாடு சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
அன்னாபிஷேகம் செய்யும் முறை
ஐப்பசி பௌர்ணமி அன்று காலை சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு அன்னம் சாற்றுகின்றனர். இதை அன்னாபிஷேகம் என்பர்.
இறைவனுக்கு அன்னாபிஷேகத்துடன் சாயரட்சை பூஜையும் நடைபெறுகிறது. பின்னர் இரண்டாம் தரிசனம் வரை (மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை) சிவபெருமான் அன்னாபிஷேகராக காட்சி தருவார். இரண்டாவது பூஜைக்குப் பிறகு அன்னம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்துவிடுவது வழக்கம். குறிப்பாக, லிங்கத்தின் மீதுள்ள அன்னம் விடுத்து, வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட அன்னம் தயிரில் கலந்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.
எஞ்சிய அன்னம் திருக்குளத்திலோ கடலிலோ கரைந்துவிடும். இறைவனின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
அன்னாபிஷேகம் சிறப்புகள்
இவ்வுலகைப் படைத்து அதற்கு உணவு வழங்கும் ஈசனுக்கு அபிஷேகம் என்ற பெயரில் அன்னதானம் வழங்கி கொண்டாடப்படும் விழாதான் அன்னாபிஷேகம்.
அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் அன்னாபிஷேக நாளாகும். இந்நாளில் அன்னாபிஷேகத்தில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பருக்கையிலும் இறைவனின் அதிசய திருவுருவத்தை காணலாம். உணவு கடவுளுக்கு சமம். எனவே, உணவை வீணாக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அன்னாபிஷேகம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று சிவபெருமானை ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஏற்ற பொருளை கொண்டு வழிபடுவது சிறப்பு. ஐப்பசி மாத பௌர்ணமியில் அஸ்வினி நட்சத்திரம் வருவதால் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னங்களை அபிஷேகம் செய்து சிவனை வழிபடுகிறோம்.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை தரிசித்தால் ஈசனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
அன்னாபிஷேகத்தின் போது சிவலிங்கம் முழுவதுமாக அன்னங்களால் அலங்கரிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் சிவனுக்கு அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்கரிக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு உகந்த இந்த அன்னம் ஒரு பருக்கை கூட வீணாகாது என்பதை அன்னாபிஷேகம் உணர்த்துகிறது.
சிவபெருமான் அபிஷேக பிரியர். இந்த ஐப்பசி பெளர்ணமி நாளில் சிவபெருமானுக்கு தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள் மற்றும் அன்னம் என பலவற்றால் அபிஷேகம் செய்து இறைவனின் அருளைப் பெறுவோம்.
அன்னாபிஷகத்தில், அலங்கரிக்கப்பட்ட அன்னம் இரண்டு நாழிகைகள், அதாவது ஒன்றரை மணி நேரம் வைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் யஜுர் வேத பாராயணம், ருத்ரம், சமகம் ஆகியவை சொல்லப்படுவது வழக்கம்.
அன்னாபிஷேகத்தின் பலன்கள்
- சோறு இருக்கும் இடத்தில் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அன்னாபிஷேகத்தால் அலங்கரிக்கப்பட்ட சிவனை தரிசிப்பவர்கள் மட்டுமே சொர்க்கத்தில் நுழைய முடியும் என்பது இதன் பொருள்.
- அன்னாபிஷேகம் தரிசனம் செய்வதன் மூலம் தீராத தோஷங்கள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் பிரச்சனைகள் தீரும். லாபம் அதிகரிக்கும்.
- அன்னாபிஷேக நாளில் இறைவனின் மேனியில் இருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் சிவலிங்கம் என்பதால் அன்றைய தினம் சிவ தரிசனம் செய்தால் அது கோடி சிவ தரிசனம் செய்ததற்கு சமம்.
- அன்னாபிஷேக நாளில் வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அன்னதிருமேனியில் சிவனை வழிபடுவது மிகவும் விசேஷம்.
- அன்னாபிஷேகத்தின் போது உங்கள் பங்கு வேண்டும் என்றால், அன்னாபிஷேகத்திற்கு முந்தைய நாள் எவ்வளவு வேண்டுமானாலும் பச்சரிசி வாங்கி கொடுக்கலாம்.
- அன்னாபிஷேக வைபவத்தை தரிசித்தால், வாழ்வில் உணவுப் பஞ்சமே ஏற்படாது. எந்தவித தோஷங்களும் நெருங்காது.
- அன்னாபிஷேகத்தில் சிறிதளவு அரிசி வாங்கி சிவபெருமானுக்கு கொடுத்தாலும் அது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் சந்ததியினருக்கும் புண்ணியம்.
இதையும் படிக்கலாம் : பெளர்ணமியில் குலதெய்வ வழிபாடு..!