அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து – இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து – பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து – துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற – னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த – மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க – வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த – கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : திருப்புகழ் 1 – 110