பசுவிற்கு அகத்திக்கீரையை வாங்கிக் கொடுப்பதை நிறைய பார்த்திருப்போம். இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? மக்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பொதுவாக பசுக்களுக்கு பழங்கள் மற்றும் கீரைகளை கொடுப்பது நல்லது. பசுக்கள் மஹாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுவதால், பசுக்களுக்கு உணவைத் தானமாக வழங்குவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.
பசுவிற்கு அகத்திக்கீரையை தானம் செய்தால், வீட்டில் நீண்ட நாளாக தடைப்பட்டுக்கொண்டிருந்த விசேஷங்கள் அனைத்தும் விரைவில் நடக்கும். நாம் வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது. அகத்திக் கீரையை பசுவுக்குக் கொடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
16 அகத்திக்கீரையை பசுவிற்கு கொடுத்தால் நம் மூன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் விட்ட பாவம் கூட நீங்கும். பசுவை ஒரு முறை பிரதக்ஷணம் செய்தால், உலகம் முழுவதும் பிரதக்ஷணம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். பசுவை வணங்குவதால் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனை வணங்கிய பாக்கியம் கிடைக்கும்.
பசுவுக்கு புல் கொடுப்பது அல்லது அதன் கழுத்தில் தடவிக்கொடுத்தாலோ கோடி புண்ணியம் என்று கூறப்படுகிறது. பசு நடக்கும் போது ஏற்படும் புழுதி நம்மீது படுவது கூட மங்களகரமானதாக கருதப்படுகிறது. தசரத சக்கரவர்த்தியும், ரகு சக்கரவர்த்தியும் பசுவின் கால் பட்ட மண்ணைத்தான் பூசிக்கொண்டார்களாம். பசு அந்த இடத்தில் “அம்மா” என்று அழைத்து மங்கள ஒலி எழுப்புகிறது. பசுவின் பக்கத்தில் இருந்து செய்யப்படும் பூஜையால் அதிக பலன்கள் கிடைக்கும். சாதாரண மனிதர்கள் கண்களுக்கு தெரியாத எமதூதர்கள், எமன் போன்றோர் பசுமாட்டின் கண்களுக்கு தெரியுமாம். இதனாலேயே பசுமாடு யாராவது இறக்க போகிறார்கள் என்றால் அதிக சத்தம் எழுப்பும்.
அகத்திக்கீரையை முனிவிருட்சம் என்றும் வக்ரபுஷ்பம் என்றும் அழைக்கப்படுகிறது. அகத்திய முனிவரின் நட்சத்திரம் வானில் தோன்றும் நேரம் அகத்திக்கீரையும் பூ பூப்பதால் இதற்கு அகத்திக்கீரை என்ற பெயர் வந்தது.
இதையும் படிக்கலாம் : தானங்களும் அதன் பலன்களும்..!